கோவை அருகே பரபரப்பு மயக்க ஊசி போட்டு 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்


கோவை அருகே பரபரப்பு மயக்க ஊசி போட்டு 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 2 Feb 2019 5:00 AM IST (Updated: 2 Feb 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே மயக்க ஊசிபோட்டு 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பள்ளிக்கூட வேன் டிரைவர் மற்றும் உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துடியலூர்,

கோவையை அடுத்த காரமடையில் வித்ய விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பிரி.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுவர பள்ளி நிர்வாகம் சார்பில் வேன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 4 வயது சிறுமி ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கை, கால் வலிப்பதாகவும், மயக்கம் வருவதுபோல் உள்ளது என்றும் தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார்.

இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை சோதித்த டாக்டர்கள், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் அவர்களது அறிவுறுத்தலின்பேரில் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். தொடர்ந்து போலீசார் அந்த தனியார் பள்ளி வேன் டிரைவரான பிளிச்சி ஊராட்சி ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 37), உதவியாளரான கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (55)ஆகியோரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர்கள்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதுகுறித்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட சிறுமியை பள்ளிவேனில் கடைசி நிறுத்தத்தில் தினமும் இறக்கிவிடுவது வழக்கம்.அப்போது வேனில் இந்த சிறுமியை தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.இதைபயன்படுத்திக்கொண்ட டிரைவரும், உதவியாளரும் அந்த சிறுமியை பலவந்தப்படுத்தி உள்ளனர்.முன்னதாக அந்த சிறுமிக்கு மயக்க ஊசிபோட்டுள்ளனர். பின்னர் வேனை நிறுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்க ஊசி போட்டுள்ளதை சிறுமியும் கூறினாள். வழக்கமாக சிறுமி வீட்டிற்கு 4 மணிக்கு செல்லுவார். ஆனால் சம்பவத்தன்று அவள் 5 மணிக்கு மேல்தான் வீட்டிற்கு கொண்டு சென்று இறக்கி விடப்பட்டு உள்ளாள். கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கூறினார்.

இந்த சம்பவம் காரணமாக காரமடை வித்ய விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்பு மதியம் 1 மணி முதல் பெற்றோர்களும், பொதுமக்களும் திரண்டு இருந்தனர். தொடர்ந்து அவர்கள் மாலை 6 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதை தொடர்ந்து அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் பலர் திரண்டு வந்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Next Story