‘அ.தி.மு.க.வுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

‘அ.தி.மு.க.வுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குசாவடி முகவர் குழு அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் நடந்தது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கோவில்பட்டியில் அரசு கல்லூரி, சர்வதேச தரம் வாய்ந்த ஆக்கி மைதானம் தொடங்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 யூனியன்களுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.
அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று விளக்கி கூறி, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வேண்டும். தேர்தல் வரும்போது அ.தி.மு.க.வின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். ஆனால் நாம் இப்போதே களப் பணிகளை தொடங்க வேண்டும். நாம் ஒரு கணமும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அ.தி.மு.க.வுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. எனவே நாம் சுறுசுறுப்பாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
முன்னதாக அவர், கயத்தாறில் நடந்த வாக்குசாவடி முகவர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் கழுகுமலை-சங்கரன்கோவில் ரோட்டில் பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், நகர செயலாளர்கள் விஜயபாண்டியன், கப்பல் ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், வினோபாஜி, நிலவள வங்கி தலைவர் ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






