போளூர், செங்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு


போளூர், செங்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 1 Feb 2019 10:15 PM GMT (Updated: 1 Feb 2019 10:52 PM GMT)

போளூர், செங்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

கரீப் பருவம் 2018-19-ம் ஆண்டில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பொருட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் போளூர் தாலுகா அத்திமூர், திருவண்ணாமலை தாலுகா நார்த்தாம்பூண்டி கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது கரீப் பருவம் 2018-19-ம் ஆண்டில் விவசாயிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் சார்பில் போளூர் தாலுகா 99புதுப்பாளையம் மற்றும் செங்கம் தாலுகா எறையூர் ஆகிய இடங்களில் கூடுதலாக 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கரீப் பருவம் 2018-19-ம் ஆண்டிற்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,770 மற்றும் ஊக்கத் தொகையாக ரூ.70 என மொத்தம் குவிண்டாலுக்கு ரூ.1,840 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,750 மற்றும் ஊக்கத் தொகையாக ரூ.50 என மொத்தம் குவிண்டாலுக்கு ரூ.1,800 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களிடம் இருந்து பெறப்பட்ட நெல்லுக்கு உண்டான தொகையினை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களின் நெல்லினை விற்பனை செய்து பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Next Story