நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 2 Feb 2019 5:00 AM IST (Updated: 2 Feb 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

‘நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும்’ என்று சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம், 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- இன்றைக்கு மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதுபோல பசு வளர்ப்பு திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

ஏழைக்கு உணவு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இது ஏழைக்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய நன்மை என்று நான் கருதுகிறேன். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தந்துள்ளார்கள். அதுவும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற நன்மை ஆகும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 2022-க்குள் வீடு இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் வீடு கட்டி தரப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒரு அறிவிப்பு ஆகும்.

கேள்வி:- பல அரசியல் கட்சிகள் இது தேர்தலுக்கான பட்ஜெட் என்று விமர்சனம் செய்துள்ளார்களே?

பதில்:- மக்களுக்கு நன்மை செய்வது தான் அரசின் கடமை. அந்த அடிப்படையிலே மத்திய அரசு ஏழைகளுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. எனவே திட்டத்தை அறிவித்தால் அதில் அரசியல் உள்நோக்கம் கற்பிக்கின்றார்கள். அது தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட பட்ஜெட் என்றார்கள். அறிவிக்காவிட்டால் பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என்று கூறுவார்கள்.

ஆகவே ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கும் போது மக்களுக்கு தேவையான திட்டங்களை வழங்கும் என்று எதிர்பார்த்து தான் மக்கள் அந்த அரசை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த அடிப்படையிலேயே மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை இப்போது அறிவித்துள்ளது. வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரித்துள்ளார்கள். இது வேலைக்கு செல்பவர்களுக்கு நன்மை கொடுக்கும்.


தமிழகத்தை பொறுத்தவரைக்கும், ஜெயலலிதா இருந்தபோது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடன் போன்று வட்டியில்லா கடனும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயிகளுக்கு இன்னும் கூடுதலாக சலுகை செய்யப்படுகிறது. நடவு மானியம், குறுவை சாகுபடி, சம்பா தொகுப்பு திட்டம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை ஜெயலலிதா அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

கேள்வி:- மத்திய அரசு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது என்று குற்றச்சாட்டை விவசாயிகள் வைக்கிறார்களே?

பதில்:- மத்திய அரசு வேறு, மாநில அரசு வேறு. அது தேசிய அரசு. பல்வேறு மாநிலங்களின் நிலையை அறிந்து தான் அறிவிப்பார்கள். நம்முடைய மாநிலத்தில் இருக்க கூடிய பிரச்சினையை தான் பேசமுடியும்.

கேள்வி:- அடுத்து வரும் தமிழக பட்ஜெட் இதுபோன்று கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக அமையுமா?

பதில்:- அதை பட்ஜெட்டில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அது எப்படி பட்ஜெட்டை பற்றி நான் முன்கூட்டியே சொல்லமுடியும்.

கேள்வி:- தொழில்முனைவோர் மாநாட்டில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்?

பதில்:- தமிழகம் இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதில் ஒரு முன்னிலை மாநிலமாக திகழவேண்டும் என்பதற்காக ஜெயலலிதா தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் 2015-ம் ஆண்டு முதன்முதலாக தொடங்கினார். இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கப்பெற்றது. தொழில் தொடங்க அனைத்து வசதிகளையும் மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது என்று அவர்கள் எண்ணிய காரணத்தினாலே எங்களுடைய நடவடிக்கையை பார்த்து பல தொழில் அதிபர்கள் பலமுறை என்னை சந்தித்து பேசினார்கள். அதை எல்லாம் கவனத்தில் கொண்டு அண்மையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் ரூ.3 லட்சத்து 431 கோடி தொழில் முதலீடு செய்வதற்காக முன்வந்து அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். 304 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இது ஒரு வரலாற்று சாதனை. ஜெயலலிதா அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5½ லட்சம் பேருக்கும் வேலை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

கேள்வி:-வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து?

பதில்:- நான் ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறேன். தேர்தல் அறிவித்த பிறகு தான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். ஆகவே தேர்தல் அறிவித்த பிறகு தான் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும். தற்போது அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அந்த அடிப்படையிலே, அ.தி.மு.க.வை பொருத்தவரைக்கும் தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும்.

கேள்வி:- அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒடுக்கியதற்காக பாராட்டுகள் குவிகிறதே, இருந்தாலும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து?

பதில்:- நீங்கள் சொல்வதே தவறான கருத்து ஆகும். அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்குவது என்று கூறுவது தவறானது ஆகும். அதனை நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள். இது ஒரு ஜனநாயக நாடு. அவரவர்கள் உரிமைகளை பெறுவதற்கு கோரிக்கை வைக்கலாம். எது நியாயமான கோரிக்கையோ அது நிறைவேற்றப்படும். ஏற்கனவே ஜெயலலிதா அரசு 7-வது ஊதியகுழு பரிந்துரைப்படி சம்பளம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியும் ஜெயலலிதா அரசு வழங்கி வருகிறது. பழைய ஓய்வூதியம் திட்டம் என்பது 2003-ம் ஆண்டுக்கு முன்பே இருந்தது. அதன்பிறகு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. அந்த அடிப்படையில் தான் ஊழியர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேருகிறவர்கள் எல்லாம் புதிய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் தான் சேருகிறார்கள்.

கேள்வி:- அவர்கள் மீதான நடவடிக்கை எப்படி இருக்கும்?

பதில்:- யார், எந்த தரப்பு போராட்டம் செய்திருந்தாலும் சரி, சட்டரீதியாகத்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது எந்த ஆட்சியில் இருந்தாலும் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்வார்கள். அதுதான் இந்த ஆட்சியிலும் நடைபெற்றது.

கேள்வி:- தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தில் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறாரே?

பதில்:- என் மீது விமர்சனம் செய்வதற்கும், ஊராட்சி சபை கூட்டத்துக்கும் சம்பந்தமே கிடையாது. மு.க.ஸ்டாலின் எங்களை தாக்கி பேச வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டத்தை பயன்படுத்துகிறார். தவிர மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஊராட்சி சபை கூட்டம் நடைபெறுவதாக தெரியவில்லை.

மு.க.ஸ்டாலின் எத்தனையோ போராட்டங்களை தூண்டி விட்டார். எத்தனையோ பொய் வழக்குகளை போட முயற்சி செய்தார். அத்தனையும் தோல்வியில் முடிந்தது. என்றைக்கும் உண்மையும், தர்மமும் தான் வெல்லும். என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக ஊராட்சி சபை கூட்டத்தில் தேவையற்ற கருத்துகளை அவர் பேசி வருகிறார். அவர் விரக்தியின் விளிம்பிற்கு போய்விட்டார்.

கேள்வி:- மத்திய பட்ஜெட்டில் மாநில அரசுக்கு 32 சதவீதமாக இருந்த நிதியை 42 சதவீதமாக உயர்த்தி உள்ளனர். இந்த நிதி கூடுதலாக கேட்கப்படுமா?

பதில்:- பட்ஜெட்டை இன்னும் நான் முழுமையாக படிக்கவில்லை. பத்திரிகையில் வந்ததை தான் படித்தேன். முழு விவரங்களை சேகரித்த பிறகு ஊடகங்களுக்கு தெரிவிப்பேன். கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்ப்பதற்கு ஜெயலலிதா அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த அரசு எதை செய்தாலும், அதை தி.மு.க. எதிர்க்கத்தான் செய்கிறது. நாங்கள் பொங்கல் பரிசு கொடுக்கும் போது கூட வழக்கு தொடர செய்து தடையாணை பெற செய்தார்கள். ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. நமக்கு உணவு வழங்க கூடிய விவசாயிகளுக்கு மனிதாபிமான முறையில் பொங்கல் பரிசை வழங்கினோம். ஏழைகளுக்கு கொடுப்பதை எந்த கட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டும்.

கேள்வி:- இடைக்கால பட்ஜெட்டை தம்பித்துரை புறக்கணித்திருக்கிறாரே?

பதில்:- இதுவரை அதுபற்றிய தகவல் வரவில்லை.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதைத்தொடர்ந்து சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அதி.மு.க. செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பொதுமக்களிடம் அவர் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

Next Story