‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்’ உதயநிதி ஸ்டாலின் பேச்சு


‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்’ உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 2 Feb 2019 4:30 AM IST (Updated: 2 Feb 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்‘ என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கண்டமனூர்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பிச்சம்பட்டியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும். கல்விக் கடனை ரத்து செய்வதோடு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். குடிநீர், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். கிராமங்கள் தோறும் திருமண மண்டபம் கட்டிக் கொடுக்கப்படும்.

முல்லைப்பெரியாற்றில் இருந்து இந்த பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரவும், சக்கிலிச்சி அம்மன் கண்மாய்க்கு குன்னூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதை அவர் சுருட்டிக்கொண்டு உலகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

மத்திய அரசின் அடிமையாக தமிழக அரசு உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் உள்ள மர்மத்தையே கண்டுபிடிக்க முடியாத எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மக்களை பற்றி சிந்திக்கவா போகிறார்கள்?.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டம் முடிந்தவுடன் பிச்சம்பட்டி காலனிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு வசிக்கிற மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ., தேனி மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், தேனி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன், மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் மூக்கையா, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story