தர்மபுரியில் நகர்ப்புற வளர்ச்சி விழிப்புணர்வு ஊர்வலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்பு

தர்மபுரியில் நகர்ப்புற வளர்ச்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலம் நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர் திரளாக பங்கேற்றனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2019-ம் ஆண்டின் நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருவிழா இந்தியா முழுவதும் தொடங்கியது. இந்த விழா வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. இதன் ஒருபகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கியது.
இதையொட்டி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி நடந்தது. இந்த ஊர்வலத்தை மகளிர் திட்ட இயக்குனர் ஆர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், சமுதாய அமைப்பாளர்கள், உதவித்திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. மத்திய அரசின் சார்பில் நகர்ப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் பாதாளசாக்கடை திட்டம், தூய்மை இந்தியா திட்டம், சாலைகள் மேம்பாட்டு திட்டம், அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறைகளை கட்டும் திட்டம் ஆகியவை குறித்து இந்த ஊர்வலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story






