ஊருக்குள் அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினர்


ஊருக்குள் அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினர்
x
தினத்தந்தி 3 Feb 2019 4:30 AM IST (Updated: 3 Feb 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே ஊருக்குள் அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சிக்கு உட்பட்டது தென்னலக்குடி கிராமம். இங்கு உள்ள காளியம்மன் கோவில் தெரு, கன்னிக்கோவில் தெரு ஆகிய தெருக்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த தெருக்களில் கடந்த சில வாரங்களாக வெறிபிடித்து சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று சாலையில் நடந்து செல்பவர்களையும், வீட்டில் இருப்பவர்களையும் விரட்டி, விரட்டி கடித்து வந்தது. மேலும் அங்குள்ள நாய், கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளையும் கடித்து குதறியது.

இதுவரை குரங்கு கடித்து 30-க்கும் மேற்பட்டோர், சீர்காழி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் பெரும்பாலானோர் குரங்கு கடிக்கு பயந்து குடும்பத்துடன் தங்களது வீட்டை காலி செய்து, தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுடன் மாற்று இடத்திற்கு குடி பெயர்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வனத்துறையினர் மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் தென்னலக்குடி காளியம்மன் கோவில் தெருவில் சுற்றி திரிந்த குரங்கை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த குரங்கை கூண்டுக்குள் அடைத்து கொண்டு சென்றனர்.

குரங்கு பிடிபட்டதை அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் இருந்து விடுபட்டதுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாற்று இடத்திற்கு குடிபெயர்ந்த பொதுமக்கள் தங்களது உடைமைகள், கால்நடைகளுடன் தங்களது வீடுகளுக்கு திரும்பி வந்தனர்.

பொதுமக்களை கடித்து துன்புறுத்திய குரங்கை பிடித்த வனத்துறையினருக்கும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story