மண்டபம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் கடையடைப்பு, உண்ணாவிரதத்தில் ஈடுபடவும் முடிவு


மண்டபம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் கடையடைப்பு, உண்ணாவிரதத்தில் ஈடுபடவும் முடிவு
x
தினத்தந்தி 3 Feb 2019 4:00 AM IST (Updated: 3 Feb 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் கடற்கரையில் தங்குதளம் அமைத்து மீன்பிடிக்கும் வெளியூர் படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். மேலும் வருகிற 5-ந்தேதி கடையடைப்பு, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடகடல் பகுதியான கோயில்வாடி கடற்கரையில் தங்கச்சிமடம், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் தங்குதளம் அமைத்து வாரம் 3 முறை மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடல் வளத்தை பாதிக்கும் இரட்டைமடி வலை மீன்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை முற்றிலும் தடுக்க வேண்டும் எனவும் மண்டபம் மீனவர் நலச்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மீன்வளத்துறை அதிகாரிகள் உடந்தையால் இரட்டைமடி வலை மீன்பிடிப்பு மண்டபம் கடல் பகுதிகளில் தொடர்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் இரட்டைமடி வலை மீன்பிடி விவகாரம் தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் கோயில்வாடியை சேர்ந்தவரின் படகில் ரோந்து சென்றுள்ளனர்.

இதனால் இரட்டைமடி வலையை பயன்படுத்தும் விசைப்படகு உரிமையாளர்களுக்கும், கோயில்வாடி பகுதி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. அதனை தொடர்ந்து இதுகுறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்த மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்களை ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளனர். அங்கு குறைந்த எண்ணிக்கையில் சென்ற மண்டபம் மீனவர்களை பாம்பன், தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் தாக்க முயன்றனராம். இதனால் சமரச கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காணுவது தொடர்பாக மண்டபம் அனைத்து மீனவர் நலச்சங்கங்கள், வர்த்தக சங்கம், அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையில் நடந்தது. கூட்டத்திற்கு மண்டபம் முன்னாள் பேரூராட்சி தலைவர் தங்க மரைக்காயர் தலைமை தாங்கினார். விசைப்படகு உரிமையாளர் இக்பால் மரைக்காயர், மத்திய சங்க தலைவர் கணபதி, முன்னாள் கவுன்சிலர் மைதீன், தி.மு.க. நகர் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், இரட்டை வலை மீன்பிடிப்புக்கு உடந்தையாக செயல்படும் மீன்வளத்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மண்டபத்தில் தங்குதளம் அமைத்து மீன்பிடிப்பில் ஈடுபடும் மண்டபம் முகவரியில்லாத விசைப்படகுகளை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும், விசைப்படகு உரிமையாளர்கள் 10 பேர் மீதான பொய் வழக்கை மீன்வளத்துறை அதிகாரிகள் திரும்பபெற வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் மண்டபம் மீனவர்களையும், படகு உரிமையாளர்களையும் தாக்க முயன்ற வெளியூர் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்களின் விரோத போக்கை கண்டித்து நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி ஒருநாள் கடையடைப்பு, உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளனர். கூட்டத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜாகீர் உசேன், நாகராஜன், விஜயரூபன், செல்வக்குமார், நம்புராஜன், சுப்பிரமணி, செந்தில், அப்துல் கணான், அப்துல் காதர், சாகுல்ஹமீது உள்பட பாரம்பரிய மீனவர் சங்கம், மண்டபம் மீனவர் சங்கம், தேசிய மீனவர் சங்கம், விசைப்படகு மீனவர் நலச்சங்கம், விசைப்படகு மீனவர் முன்னேற்ற சங்கம், கடல் தாய் மீனவர் சங்கம், செம்மீன் மீனவர் சங்கம், நாட்டுப்படகு மீனவர் சங்கம் போன்றவற்றின் நிர்வாகிகள், மீனவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story