திண்டிவனம் போக்குவரத்து கழகம் முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் தர்ணா போராட்டம்


திண்டிவனம் போக்குவரத்து கழகம் முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2019 4:15 AM IST (Updated: 3 Feb 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டிவனம்,

திண்டிவனத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இங்கு 100–க்கும் மேற்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தினசரி 550 கிலோ மீட்டர் வரை பஸ்களை இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பணிமனை அதிகாரிகள் தினசரி 600 கி.மீ. வரை பஸ்களை இயக்கவேண்டும் என டிரைவர்களிடம் கூறினர். இதனால் நேற்று அதிகாலை 3 மணிக்கு பணிக்கு வந்த கண்டக்டர்கள், டிரைவர்கள் தங்களது பணியை புறக்கணித்து பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பணிமனை மேலாளர் மற்றும் திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தினசரி கூடுதலாக 50 கி.மீ. தூரம் பஸ்களை இயக்குவதால் எங்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அதனால் வழக்கம்போல் 550 கி.மீ. தூரம் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும். சிறப்பு பஸ்களை இயக்க கோரி கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறினர்.

அதற்கு பணிமனை மேலாளர், வழக்கம்போல் 550 கி.மீ. தூரம் பஸ்களை இயக்குங்கள் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் காலை 8 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

டிரைவர், கண்டக்டர்களின் இந்த தர்ணா போராட்டம் காரணமாக திண்டிவனம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.


Next Story