அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிநிரவல் செய்யப்பட்ட ஊழியர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிநிரவல் செய்யப்பட்ட ஊழியர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து 2013–ம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தியது. இதை தொடர்ந்து 2017–ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க, அங்கு பணிபுரிந்து வந்த பேராசிரியர்கள், ஊழியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு அரசு சார்ந்த பணிகளில் நியமிக்கப்பட்டனர்.
இவர்களில், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகம் முன்பு ஒன்று திரண்டனர். தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக துணை வேந்தர் அலுவலகத்திற்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து துணை வேந்தர் முருகேசன் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பணிநிரவல் செய்யப்பட்ட ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பன்னீர்செல்வம், குமரவேல், கர்ணாசெந்தில், ஞானசங்கர், புஷ்பலதா, மலர்விழி உள்ளிட்ட ஊழியர்கள் துணை வேந்தர் முருகேசனிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். இது தொடர்பாக மனு ஒன்றையும் கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
அரசின் பல்வேறு துறைகளில் பணிநிரவல் செய்யப்பட்ட ஊழியர்களை உடனடியாக அண்ணாமலை பல்கலைக்கழகம் திரும்ப பெற வேண்டும், பணிநிரவல் செய்யப்பட்டவர்களில் 70–க்கும் மேற்பட்டோர் மன அழுத்தத்தின் காரணமாக மரணம் அடைந்துள்ளனர். எனவே அவர்களது குடும்பத்தினருக்கு சேரவேண்டிய பணப்பயன் மற்றும் கருணை அடிப்படையில் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கிட வேண்டும். தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு, தேர்வு நிலை போன்றவை எங்களுக்கும் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






