உடுமலை ரெயில் நிலையத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ் நின்று சென்றது சி.மகேந்திரன் எம்.பி.தலைமையில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு


உடுமலை ரெயில் நிலையத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ் நின்று சென்றது சி.மகேந்திரன் எம்.பி.தலைமையில்  பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 2 Feb 2019 10:30 PM GMT (Updated: 2019-02-03T01:35:33+05:30)

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.ரெயில் நிலையத்திற்கு வந்ததும் சி.மகேந்திரன் எம்.பி. தலைமையில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உடுமலை,

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, வழியாக பொள்ளாச்சி வரை இயக்கப்பட்டு வந்தது. அந்த ரெயிலை உடுமலை, பழனி, திண்டுக்கல் வழியாக மதுரை வரை நீடித்து இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை தொடர்ந்து அந்த ரெயில் கடந்த 15 மாதங்களாக மதுரை வரை நீட்டித்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது.

அந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்பினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவும் ரெயில்வே துறை அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சி.மகேந்திரன் மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஸ்கோயலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அப்போது ரெயில்வே மத்திய மந்திரி பியூஸ் கோயல், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதன்படி அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு மத்திய ரெயில்வே துறை கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக காலை 9.30 மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

பின்பு இங்கிருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும். எதிர்மார்க்கத்தில் அந்த ரெயில் மதுரையில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்து, பின்னர் இங்கிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சி, பாலக்காடு, எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்தை சென்றடையும். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று சென்றால் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் பயனடைவார்கள்.

இந்த ரெயில் உடுமலையில் நின்று மதுரைக்கு செல்வதால் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு இணைப்பு ரெயிலாகவும் இந்த ரெயில் அமைந்துள்ளது. அதனால் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்வதால் பல்வேறு தரப்பு பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முதல்கட்டமாக பரிசோதனை அடிப்படையில் உடுமலை ரெயில் நிலையத்தில் 6 மாதத்திற்கு தினசரி நின்று செல்லும் வகையில் இயக்கப்படும். ரெயில் பயணிகளின் வரவேற்பை பொறுத்து இந்த ரெயில் தொடர்ந்து உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தென்னக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் வசதி தொடக்க விழா நேற்றுகாலை உடுமலை ரெயில் நிலைய வளாகத்தில் நடந்தது. இந்த வசதியை பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சி.மகேந்திரன் தொடங்கி வைத்து பேசுகையில் ‘‘இந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு உதவிய மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் உடுமலை வழியாக பெங்களூருக்கும், உடுமலை, திண்டுக்கல், திருச்சி வழியாக சென்னைக்கும் புதியதாக ரெயில்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்’’ என கூறினார்.

விழாவில் ரெயில்வே துறை மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியரா, கூடுதல் கோட்ட மேலாளர் லலித்குமார் மன்சுகானி, மூத்த கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்ததும் அங்கு கூடியிருந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், ரெயில் பயணிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

ரெயில் என்ஜின் டிரைவர்கள் உள்ளிட்டோருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்த சி.மகேந்திரன் எம்.பி.க்கு பல்வேறு தரப்பினர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் விழாவையொட்டி உடுமலை ரெயில் நிலையத்திற்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.


Next Story