“மத்திய பட்ஜெட் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


“மத்திய பட்ஜெட் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 3 Feb 2019 4:45 AM IST (Updated: 3 Feb 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்று மோடி பங்கேற்கும் விழாவுக்கான பந்தல்கால் நாட்டும் நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி வருகிறார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அரசு விழாவுக்காக ஒரு மேடையும், கட்சி கூட்டத்திற்காக இன்னொரு மேடையும் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பந்தல்கால் நாட்டினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பட்ஜெட்டை மலிவான பட்ஜெட் என்று கூறியவர்கள் மலிவாகி போனவர்கள். நாட்டு மக்கள் நலன் கருதி இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. மக்களுக்கு நல்லது செய்தால், சகித்து கொள்ள முடியாது என்பதை காங்கிரசும், மற்ற எதிர்க்கட்சிகளும் நிரூபித்துள்ளன.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா நாடு முழுவதும் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். மீண்டும் மத்தியில் வலுவான ஆட்சியை அமைப்போம்.

தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமையும். அதில் பா.ஜனதா அங்கம் வகிக்கும். இந்த கூட்டணி தமிழகத்தில் 30 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணிக்கு பா.ஜனதா தலைமை தாங்கும் என்று கூறவில்லை. இப்போதும், நாங்கள் அதையே தான் கூறுகிறோம்.

அ.தி.மு.க. கட்சியில் அனைத்து தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்குகிறார்கள். அது அந்த கட்சியின் உரிமை. அதை அவர்கள் செய்கிறார்கள். தமிழகத்தில் 3-வது அணி அமையும் என தம்பிதுரை கூறியது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.

குமரி மாவட்டம் வரும் பிரதமர் இங்கு முடிவுற்ற பணிகளையும், புதிய திட்டங்களையும் தொடங்கி வைப்பார். துறைமுகம் பற்றி இப்போது நான் எதுவும் கூறுவதற்கில்லை. 19-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story