தோகைமலை அருகே மின்மோட்டார் மூலம் காவிரி குடிநீர் திருட்டு


தோகைமலை அருகே மின்மோட்டார் மூலம் காவிரி குடிநீர் திருட்டு
x
தினத்தந்தி 2 Feb 2019 11:00 PM GMT (Updated: 2 Feb 2019 9:24 PM GMT)

தோகைமலை அருகே மின்மோட்டார் மூலம் காவிரி குடிநீர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சியில் உள்ள பேரூர், உடையாபட்டி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குளித்தலை மருங்காபுரி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தேசியமங்கலத்தில் இருந்து பேரூர் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் செல்கிறது.

இந்த காவிரி குடிநீரை இப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்த கூடலூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாதம் தோறும் ரூ.55 ஆயிரம் கூட்டு குடிநீர் திட்ட அலுவலகத்திற்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பேரூர் பகுதிக்கு காவிரி குடிநீர் சரிவர வரவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் வழங்ககோரி கூடலூர் ஊராட்சி மற்றும் தோகைமலை ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து காவிரி குடிநீர் திட்ட உதவி நிர்வாக பொறியாளர் கிரீஸ்குமார், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், தோகைமலை ஒன்றிய ஆணையர் ராணி, கூடலூர்் ஊராட்சி செயலாளர் நேசமணி, தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் பேரூருக்கு சென்று காவிரி குடிநீர் குழாய் செல்லும் பாதையை ஆய்வு செய்தனர். அப்போது தேசியமங்கலம்-பேரூர் மெயின் ரோட்டில் உள்ள பெரிய ஆற்றுவாரி பாலம் அருகே புதுக்கோட்டையை சேர்ந்த சிவா என்பவர் நடத்திவரும் செங்கல் சூளைக்கு அனுமதியின்றி காவிரி குடிநீர் செல்லும் குழாயில் இருந்து பைப் லைன் அமைத்து மின் மோட்டார் பொருத்தி குடிநீரை திருடி வந்தது தெரியவந்தது.

இதேபோல் மற்ற பகுதிகளில் பேரூரை சேர்ந்த சுரேஷ் மற்றும் நடராஜ் ஆகியோரும் அனுமதியின்றி தனித்தனியே குழாய் அமைத்து காவிரி குடிநீரை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆய்வு குழுவினர் அனுமதியின்றி அமைக்கப்பட்ட காவிரி குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.

மேலும் அனுமதியில்லாமல் காவிரி குடிநீரை செங்கல் சூளைக்கு பயன்படுத்தியவர் மீது தோகைமலை போலீஸ் நிலையத்தில் உதவி நிர்வாக பொறியாளர் கிரீஸ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவா, சுரேஷ், நடராஜ் ஆகியோருக்கு அபராதம் விதிக்கவும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

Next Story