திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திருட்டு


திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திருட்டு
x
தினத்தந்தி 4 Feb 2019 3:45 AM IST (Updated: 4 Feb 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்ட பஸ் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி பிராட்டியூரில் மேற்கு தொகுதி வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்குள்ள அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடும்போது, உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

அந்தவகையில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி இரவு மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் நடத்திய வாகன சோதனையில் ஒரு ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த பஸ் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

அதன்பேரில், அந்த பஸ்சை பறிமுதல் செய்து திருச்சி-திண்டுக்கல் சாலையில் பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்து இருந்தனர்.

இந்தநிலையில், சம்பவத்தன்று அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ் திருட்டு போனது. இதனால், போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வட்டார போக்கு வரத்து துணை கமிஷனர் உமாசக்தி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story