அண்ணா நினைவு தினத்தையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து


அண்ணா நினைவு தினத்தையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து
x
தினத்தந்தி 4 Feb 2019 4:15 AM IST (Updated: 4 Feb 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர்- பெரம்பலூரில் அண்ணா நினைவு தினத்தையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து நடந்தது.

பெரம்பலூர்,

மறைந்த தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஆலந்துறையார் ஸ்ரீகோதண்டராமசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நேற்று நடந்தது. சமபந்தியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஏழை- எளிய மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார். இதில் கோவில் நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுகவரதராஜ பெருமாள் கோவிலிலும் சமபந்தி நடைபெற்றது.

இதேபோல் அண்ணா நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி ஆகிய கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை- எளிய மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி மலைக்கோவிலில் நடந்த சமபந்தியில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஆலத்தூர் தாசில்தார் ஷாஜகான், செட்டிக்குளம் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன், கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ், கோவில் செயல் அலுவலர் யுவராஜா, எழுத்தர் தண்டபாணி மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நடந்த சமபந்தியில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு அம்மனுக்கு வழங்கப்பட்ட புடவைகள் 300-க்கும் மேற்பட்ட ஏழை- எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கோவில் செயல் அலுவலர் மணி, பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஸ்ரீதேவி, கோவில் முன்னாள் அறங்காவலர் வள்ளிராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story