புதுக்கோட்டையில் 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் கின்னஸ் சாதனையாக அறிவிப்பு


புதுக்கோட்டையில் 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் கின்னஸ் சாதனையாக அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2019 4:30 AM IST (Updated: 4 Feb 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் 33.3 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை பல் கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ்கண்ணன். இவர் கின்னஸ் சாதனை முயற்சிக்காக 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் ஒன்றை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் வடிவமைத்தார். இந்த செயற்கை பல்லை ஆய்வு செய்த லண்டனை சேர்ந்த சுவப்னில் தலைமையிலான கின்னஸ் சாதனை குழுவினர் 33.3 அடி உயரமுள்ள இந்த செயற்கை பல்லை உலக சாதனையாக அறிவித்தனர். இதையடுத்து சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுவப்னில் தலைமையிலான கின்னஸ் சாதனை குழுவினர் சான்றிதழை டாக்டரிடம் வழங்கினர். இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் அமைக்கப்பட்டிருந்த 30 அடி உயரமுள்ள செயற்கை பல் உலக சாதனையாக இருந்தது.

சாதனை நிகழ்த்திய டாக்டர்.ராஜேஷ்கண்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பல் மருத்துவர் என்பதால் உயரமான பல்லை உருவாக்க நினைத்தேன். எனவே அது குறித்து பல தகவல்களை சேகரித்தேன். அதில் நியூசிலாந்தில் சென்சோடைன் பேஸ்ட் கம்பெனி மூலம் 30 அடி உயர செயற்கை பல் உருவாக்கப்பட்டதை அறிந்தேன். எனவே அந்த சாதனையை முறியடிப்பதற்காக அதைவிட பெரிய பல்லை உருவாக்க நினைத்தேன்.

இதை உருவாக்க சென்னையை சேர்ந்த ஒரு குழுவை சந்தித்து அவர்கள் மூலம் உருவாக்க திட்டமிட்டு இரண்டு மாதமாக முயற்சித்து வந்தோம். இதில் இரண்டு முறை பல்லில் உடைப்பும் ஏற்பட்டது. இறுதியில் 33.3 அடி உயரமும், 19.3 அடி அகலத்திலும் பல்லை உருவாக்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளோம். எனக்கு உதவியாக இருந்த அத்தனை பேருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மவுண்ட் சியோன் மெட்ரிக் பள்ளியின் முதன்மை முதல்வர் ஜோனதான் ஜெயபாரதன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தங்கமூர்த்தி, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story