அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்த திடீர் தடை

அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் திடீரென தடை விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. இதற்காக அய்யம்பாளையம் சின்னமுத்தாலம்மன் கோவில் வளாகம் அருகே வாடிவாசல், பார்வையாளர் கேலரி, விழாமேடை, தடுப்பு வேலிகள் என அனைத்தும் அமைக்கப்பட்டது. மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.10 லட்சம் மதிப்பில் பரிசுப்பொருட்கள் வாங்கி குவித்து வைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான 100 சதவீத ஏற்பாடுகள் நடந்து முடிந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் திடீரென தடை விதித்த காரணத்தால் நேற்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து காளைகளை கொண்டு வந்த அதன் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இது பற்றி ஒருங்கிணைந்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தெரிவித்ததாவது:- அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம். பின்னர் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனால் தேதி அறிவித்து ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் மும்முரமாக நடந்தது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க 700 மாடுகளும், 600 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் பணிகள் அனைத்தும் முடிவடைந்தும் மாவட்ட நிர்வாகம் திடீரென தடை விதித்துள்ளதால் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அய்யம்பாளையத்தில் வருடம்தோறும் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டை இந்த வருடமும் நடத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story






