திருக்காட்டுப்பள்ளி அருகே, காவிரி ஆற்றுப்பாலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் குறியீடு அதிகாரிகள் கவனிப்பார்களா?


திருக்காட்டுப்பள்ளி அருகே, காவிரி ஆற்றுப்பாலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் குறியீடு அதிகாரிகள் கவனிப்பார்களா?
x
தினத்தந்தி 4 Feb 2019 4:15 AM IST (Updated: 4 Feb 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றுப்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள குறியீடு வாகன ஓட்டிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டியாக இருப்பவை குறியீடுகள். நெடுஞ்சாலைத்துறையால் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குறியீட்டு பலகைகளை வைத்து தான் வாகன ஓட்டிகள் சாலையில் அடுத்து வருவது மேடா? பள்ளமா? என்பதையும், வளைவுகள் உள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். வேகத்தடைகள் எங்கு உள்ளன? ஆபத்தான பகுதி எது? என்பதையும் வாகன ஓட்டிகள் குறியீடுகள் மூலம் அறிந்து கொள்கிறார்கள். தவறான குறியீடுகள் வைக்கப்பட்டிருந்தால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும். விபத்துகளை தடுப்பதற்கு குறியீட்டு பலகைகள் மிகவும் உதவு கின்றன.

இந்த நிலையில் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி ஊராட்சி பகுதியில் காவிரி ஆற்றுப்பாலத்தில் இரு மார்க்கத்திலும் குறுகிய பாலம் என்பதை குறிக்கும் வகையில் குறியீட்டு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 பஸ்கள் ஒரே நேரத்தில் செல்லும் அளவுக்கு பாலம் அகலமாக காட்சி அளிக்கிறது.

வெளியூர்களில் இருந்து வரும் பஸ், லாரி ஓட்டுனர்கள் இந்த குறியீட்டு பலகையை பார்த்ததும் பாலம் குறுகலாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் வாகனத்தின் வேகத்தை குறைக்கிறார்கள். பின்னர் பாலம் அகலமாக இருப்பதை பார்த்து, வேகத்தை அதிகரிக்கிறார்கள். இரவு நேரத்தில் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குறியீட்டு பலகையை பார்த்து மிகவும் குழப்பம் அடைகின்றனர்.

அகலமான பாலம் முன்பு குறுகலான பாலம் என்பதை குறிக்கும் குறியீடு ஏன் வைக்கப்பட்டுள்ளது? என்பது பொதுமக்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து, பாலத்தில் உள்ள குழப்பத்தை ஏற்படுத்தும் குறியீட்டு பலகையை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story