தாயை உருட்டு கட்டையால் தாக்கிய வழக்கில் மகன், மருமகளுக்கு சிறை தண்டனை
தாயை உருட்டு கட்டையால் தாக்கிய வழக்கில் மகன், மருமகளுக்கு சிறை தண்டனை விதித்து பண்ருட்டி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பண்ருட்டி,
பண்ருட்டியை அடுத்துள்ள தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராசு என்பவரது மனைவி அல்லி(வயது 60). இவரது மகன் துளசிராமன்(40). இவருடைய மனைவி ராஜலட்சுமி(35). துளிசிராமன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி துளசிராமன், ராஜலட்சுமி ஆகியோர் அல்லியிடம் சென்று சொத்து கேட்டு தகராறு செய்த னர். அப்போது இருவரும் சேர்ந்து அல்லியை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அல்லி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அல்லி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து துளிசிராமன், ராஜலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கணேஷ் தீர்ப்பு அளித்தார்.
அதில், குற்றம்சாட்டப்பட்ட துளசிராமன், அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோருக்கு தலா 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தார்.
Related Tags :
Next Story