ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர்
ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முற்றுகையிட்டனர்.
கூடலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்குவது என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்(ஜாக்டோ- ஜியோ) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசின் அனைத்து துறை பணிகளும் பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் வராததால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை அடியோடு குறைந்தது.
இதைத்தொடர்ந்து பணிக்கு உடனடியாக திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. அவ்வாறு எச்சரிக்கையை மீறி பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பல இடங்களில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 486 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பட்டியலில் உள்ளனர். அதற்கான ஆணைகளை அனுப்பும் பணியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வு நாட்கள் நெருங்கி வருகின்ற நிலையில் ஆசிரியர்களை வேறு பள்ளிக்கூடத்துக்கு பணியிட மாற்றம் செய்தால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும். மேலும் புதிய ஆசிரியர்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்படுவது தாமதமாகும். எனவே ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள ஆரோட்டுப்பாறை, எல்லமலை, புளியாம்பாரா, பாட்டவயல், அம்பலவயல், மண்ணாத்திவயல் உள்பட 14 அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் மற்றும் நிர்வாகிகள் நேற்று மதியம் 12 மணிக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஆர்.டி.ஓ. ராஜ்குமாரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களில் கூறி உள்ளதாவது:-
அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நிர்வாக ரீதியாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மாணவ-மாணவிகளின் கல்வி உளவியலை நன்கு அறிந்த ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும். மேலும் அடுத்த 1 மாதத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளது.
எனவே நடப்பு கல்வி ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது. மாணவ-மாணவிகளின் நலன் கருதி எங்களது பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டு உள்ளது. மனுக்களை பெற்ற ஆர்.டி.ஓ. உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார்.
பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:-
அரசின் நிர்பந்தத்தால் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது. இவ்வளவு மாதங்கள் பாடம் நடத்திய ஆசிரியர்களை இடமாறுதல் செய்து விட்டு புதிய ஆசிரியர்களை கொண்டு வகுப்பு நடத்தினால் மாணவ-மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகும். 3 மாதங்கள் மட்டுமே உள்ளதால் பழைய ஆசிரியர்களை கொண்டு மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த வேண்டும்.
இல்லையெனில் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து புதிய ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டோம். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story