பொட்டிப்புரம் பகுதியில் கடும் வறட்சியிலும் சிறுதானிய சாகுபடி


பொட்டிப்புரம் பகுதியில் கடும் வறட்சியிலும் சிறுதானிய சாகுபடி
x
தினத்தந்தி 5 Feb 2019 4:15 AM IST (Updated: 5 Feb 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

பொட்டிப்புரம் பகுதியில் கடும் வறட்சியிலும் விவசாயிகள் சிறுதானியம் சாகுபடி செய்துள்ளனர்.

தேனி,

தேவாரம் அருகே பொட்டிப்புரம், டி.புதுக்கோட்டை கிராமங்கள் அமைந்துள்ளன. இவை வறட்சியான பகுதிகள் ஆகும். இங்கு மானாவாரி நிலங்களே அதிக அளவில் உள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் இங்கு பயிர் சாகுபடி நடக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை.

அதற்கு முன்பாக தென்மேற்கு பருவமழை கைகொடுத்தது. இதனால், பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் உள்ள அரளியூத்து அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. விவசாயிகள் காய்கறிகள், சிறுதானியங்கள் சாகுபடியில் ஈடுபட்டனர்.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு கம்பு, வெள்ளைச்சோளம் போன்ற சிறுதானிய பயிர்கள் சாகுபடியில் இப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டனர். கடுமையான வறட்சி நிலவிய போதிலும், இப்பயிர்கள் விளைச்சல் அடைந்துள்ளன. தற்போது சிறுதானியம் அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், பொட்டிப்புரத்தில் அறுவடை செய்யப்பட்ட நிலங்கள் மீண்டும் உழுது போடப்பட்டு உள்ளன. கோடை மழை கைகொடுத்தால் மீண்டும் குறுகிய கால பயிர் சாகுபடியில் ஈடுபடலாம் என்று விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

பொட்டிப்புரம் பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் தான் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் விவசாயம் அதிக அளவில் இல்லை என்றும், இதனால் இந்த இடத்தை ஆய்வுக்கு தேர்வு செய்ததாகவும் விஞ்ஞானிகள் கூறினார்கள். ஆனால், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமே விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தான்.

இங்குள்ள அரளியூத்து அருவியில் மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அதை தடுத்து நிறுத்தி சேமித்து வைக்க மலையடிவார பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அவ்வாறு அணை கட்டப்பட்டால் தண்ணீர் வீணாக செல்வதை தடுத்து, மழைக்காலத்தில் தேக்கி வைத்து, விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும். நிலத்தடி நீர்மட்டம் மேம்படும் என்பதால் கிணற்றுப் பாசனம் மூலமும் அதிக பயன் பெற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 More update

Next Story