சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி அடித்துக்கொலை வாலிபர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி அடித்துக்கொலை வாலிபர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Feb 2019 4:45 AM IST (Updated: 5 Feb 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்தி என்ற சக்திவேல் (வயது 32). கூலி தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் (33) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் சக்திவேல், காசி விஸ்வநாதன் (34) என்பவரது உறவினரான ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காளிதாஸ், காசி விஸ்வநாதன் ஆகியோர் சேர்ந்து ஆவுடையார்கோவிலில் உள்ள அடியார்குளம் கீழக்கரையில் வைத்து சக்திவேலை கையால் அடித்தும், காலால் கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் மிதித்தும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சக்திவேலை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் சக்திவேல் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சக்திவேல் தம்பி வெற்றிவேல் கொடுத்த புகாரின் பேரில் ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சக்திவேலை அடித்துக்கொலை செய்ததாக காசி விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள காளிதாசை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story