சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றம் ஊஞ்சலூர் அருகே பரபரப்பு
ஊஞ்சலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊஞ்சலூர்,
ஊஞ்சலூர் அருகே கணபதிபாளையம் நால்ரோடு சின்னம்மாபுரம் பகுதியில் 5 வீடுகள் சாலையோரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஜெயமணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் ஐகோர்ட்டு, சின்னம்மாபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
அதன்படி மாவட்ட கலெக்டர் கதிரவன், ஆக்கிரமிப்பு வீடுகளை ஆய்வு செய்து இடித்து அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி துணை தாசில்தார் சிவசங்கரன் மற்றும் அதிகாரிகள் நேற்று சின்னம்மாபுரத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். பின்னர் சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 5 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அந்தப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக அந்த வீடுகளில் இருந்தவர்கள் தாங்களாகவே வீட்டை காலிசெய்து அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
வீடுகள் இடிக்கப்பட்டபோது மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.