சாதிச்சான்று இல்லாததால் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் - மலைக்கிராம மக்கள் வேதனை
திண்டுக்கல் அருகே சாதிச்சான்று இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்று மலைக்கிராம மக்கள் வேதனையுடன், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை ஊராட்சி பொன்னுருக்கி கிராம மக்கள், அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், பொன்னுருக்கி மலைக்கிராமத்தில் 5 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். தேன் எடுத்தல், கிழங்கு சேகரித்தல் தான் எங்களுடைய தொழில் ஆகும். எங்கள் கிராமத்துக்கு மின்சார வசதி இல்லை. மேலும் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
இதனால் கிராம மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். எங்களுக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். இதில் பல குழந்தைகளுக்கு சாதிச்சான்று வழங்கப்படவில்லை. இதனால் மேல்நிலை படிப்புக்காக பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டு, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்சார வசதி செய்து, சாதிச்சான்று வழங்க வேண்டும், என்றனர்.
பாச்சலூர் அருகேயுள்ள பூதமலை கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், பூதமலையில் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கஜா புயல் காரணமாக அனைத்து வீடுகளும் சேதம் அடைந்து விட்டன. இதனால் குடியிருக்க வீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு அரசு வீடு கட்டி தர வேண்டும். பூதமலை கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், என்று கூறியிருந்தனர்.
அதேபோல் பண்ணைக்காடு அருகேயுள்ள ஆலடிபட்டி வலாங்குளம் மலைக்கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்துக்கு முறையான சாலை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. கர்ப்பிணிகள், உடல்நலம் பாதித்தவர்களை டோலி கட்டி தூக்கி செல்ல வேண்டியது உள்ளது. சுமார் 2 கி.மீ. தூரம் சாலை அமைத்தால் கிராம மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். எனவே, சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும் சுற்றுலா வாகன டிரைவர்கள் கொடுத்த மனுவில், சென்னையில் கார் டிரைவர் ராஜேசின் மரணத்துக்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ராஜேஷின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இதுபோல் மற்றொரு சம்பவம் நடைபெறாத வகையில் தமிழக அரசு தடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story