‘அடுத்து வரும் தேர்தல்களில் தி.மு.க.வுக்கு வெற்றி உறுதி’ மு.க.ஸ்டாலின் பேச்சு


‘அடுத்து வரும் தேர்தல்களில் தி.மு.க.வுக்கு வெற்றி உறுதி’ மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 4 Feb 2019 11:30 PM GMT (Updated: 4 Feb 2019 9:46 PM GMT)

அடுத்து வர இருக்கின்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சாத்தூர்,

சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

5 ஆயிரத்து 660 பேர் கொண்ட முகவர்கள் குழுவை மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இதை பார்க்கும்போது, கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்பை இழந்த இந்த தொகுதியில் இந்த முறை இடைதேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

தி.மு.க. சார்பில் 12 ஆயிரத்து 600 ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டு, கடந்த ஜனவரி 3-ந்தேதி திருவாரூரில் இருந்து தொடங்கியது. இது 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும் வருகிற 14-ந் தேதிக்குள் மற்ற கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்படும்.

சமீபத்தில் கொல்கத்தாவில் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்-அமைச்சர்கள் பல்வேறு கட்சி தலைவர்கள் இணைந்து பேரணி மற்றும் மாநாடு நடத்தினோம். அதில் என்னிடம் கிராமங்களில் எப்படி ஊராட்சி சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். ஊராட்சி முகவர்கள் நடத்தும் கூட்டத்தை நடத்தி பூத் முகவர்களை ஒருங்கிணைந்து உற்சாகப்படுத்துவதன் மூலமும், தலைமை கழக பொறுப்பில் இருக்கும் எங்களை போன்றவருக்கு உற்சாகம் கிடைக்கும். சட்டமன்ற சபாநாயகர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்துள்ளார். இதன் மூலம் மொத்தம் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும். தேர்தல் தேதி அறிவித்தவுடன் எத்தனை எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் ஓட தயாராக உள்ளனர் என்று தெரிய வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story