பட்டாசு தொழில் பிரச்சினை குறித்து அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


பட்டாசு தொழில் பிரச்சினை குறித்து அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Feb 2019 11:30 PM GMT (Updated: 4 Feb 2019 9:46 PM GMT)

பட்டாசு தொழில் பிரச்சினை குறித்து அ.தி.மு.க. அரசு கவலைப்பட வில்லை என்று சாத்தூர் அருகே நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சாத்தூர்,

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சியில் தி.மு.க சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினை பொதுமக்கள் எழுந்து நின்று உற்சாகமாக கை தட்டி வரவேற்றனர்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:–

காந்தியடிகள் கிராமங்களை கோவிலாக கருதுவார். அதேபோல் நானும் சத்திரப்பட்டியை ஒரு கோவிலாக கருதி பக்தனாக உங்களை தேடி வந்து இருக்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணமே இந்த ஆட்சிக்கு இல்லை. அப்படியே தேர்தல் நடத்தினாலும் தி.மு.க தான் வெற்றி பெறும். கருணாநிதி முதல்–அமைச்சர் ஆக இருந்தபோது முறையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினோம். தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 617 கிரமங்களில் உள்ள குறைகள் தீர்க்கப்பட்டன.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க.வினருக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமான குளறுபடிகள் நடக்கின்றன. சுய உதவிக்குழுக்களை கருணாநிதி ஏற்படுத்தினார். அது தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இதை பற்றி எல்லாம் ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை.

கமி‌ஷன், கரப்‌ஷன், கலெக்‌ஷன் இதில் தான் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் கொள்ளை நடக்கிறது. கொலை பழி சுமத்தப்பட்டவர் தான் முதல்–அமைச்சர் ஆக இருக்கிறார். மைனாரிட்டி நிலையில் தான் அ.தி.மு.க ஆட்சி இருக்கிறது. இதற்கு மோடி உறுதுணையாக இருக்கிறார். மோடிக்கு தி.மு.க பயப்படாது. ஆனால் அ.தி.மு.க மண்டியிட்டு கிடக்கிறது. விரைவில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் வர உள்ளது. 21 தொகுதிகளின் இடைத்தேர்தலையும் சந்திக்க உள்ளோம். சாத்தூர் தொகுதிக்கு கடந்த ஒரு வருடமாக எம்.எல்.ஏ இல்லை.

தி.மு.க மீது நீங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளதை நான் அறிவேன். நீங்களும் கூட்டமாக வந்து அதை உறுதி செய்திருக்கிறீர்கள். தற்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சி இருந்திருந்தால் உள்ளாட்சி அமைப்புகளில் 70 சதவீத பணிகள் முடிந்திருக்கும். விருதுநகர் மாவட்டத்தில் அமெரிக்க படைப்புழுக்களால் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு பிரச்சினை குறித்து இந்த அரசு கவலைப்பட வில்லை. மோடி ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்றார். ரூ.15ஐ கூட யார் கணக்கிலும் செலுத்தவில்லை.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியுமா? தமிழகத்தில் தி.மு.க ஆட்சி காலத்தில் விவசாயிகள் கடன் ரூ.7 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டது. இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பல லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் ஆதரவு அளிக்கின்றனர். அவர்களுக்கு பணம் கொடுப்பதற்காக எல்லா துறைகளிலும் கொள்ளை நடக்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் கூட மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. கொடநாடு கொலை நாடாக மாறி இருக்கிறது. 5 கொலைகள் நடந்திருப்பதாக கூறுகிறார்கள். இதற்காக கேரளாவில் இருந்து ஆட்கள் வந்ததாகவும் பேசுகிறார்கள். தமிழகத்தில் கொலைகார ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு பாரதீய ஜனதா துணை நிற்கிறது. இந்த ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் அடுத்தது தி.மு.க ஆட்சி தான். உங்கள் நம்பிக்கைக்கு நாங்கள் துணை நிற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அமுதா என்ற பெண் தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து பல்வேறு பெண்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினர். இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு, நகர செயலாளர் குருசாமி, கோசுகுண்டு சீனிவாசன். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் திருவேங்கடசாமி, முன்னால் மாவட்ட சேர்மன் கடற்கரை ராஜ், தெற்கு மாவட்ட துணை செயலாளர் நிர்மலா கடற்கரை ராஜ்,

ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு முருகேசன், மேற்கு சரவணகுமார், மாவட்ட பிரதிநிதி முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் சங்கர், மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் வனராஜா, சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராசா, சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் விவேகன் ராஜ், மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு, விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், அருப்புக்கோட்டை முன்னாள் நகர் மன்றத்தலைவருமான சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் சுப்பாராஜ், ராஜபாளையம் தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், பாலையம்பட்டி சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் கூடியிருந்த பெண்களிடம் உங்கள் குறைகள் குறித்து பேசுங்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறிய போது எல்.கே.ஜி. படிக்கும் நசிதா என்ற குழந்தை இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஸ்டாலின் தாத்தாவுக்கு நன்றி என்று பேச தொடங்கினாள். உடனே மு.க.ஸ்டாலின்... ஸ்டாலின் தாத்தா இல்லை, ஸ்டாலின் மாமா என்று கூறி சிரித்தார். கூட்டத்தில் கூடி இருந்தவர்கள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Next Story