திண்டிவனம் அருகே, மின்சாரம் தாக்கி விவசாயி பலி


திண்டிவனம் அருகே, மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 5 Feb 2019 3:28 AM IST (Updated: 5 Feb 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே ஆடுகளுக்கு தழை பறித்தபோது விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள எண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(வயது 45), விவசாயி. இவர் நேற்று காலை தனது ஆடுகளுக்கு தழை பறிக்க இந்திரா நகருக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள மாமரத்தில் ஏறி தழையை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது மரக்கிளை ஒன்று திடீரென முறிந்து அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்தது. அப்போது மரத்தில் நின்ற தேவதாசை மின்சாரம் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து, மரக்கிளையில் பிணமாக தொங்கினார்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கும், திண்டிவனம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு தேவதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பலியான தேவதாசுக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Next Story