டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.2½ லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது


டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.2½ லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2019 4:30 AM IST (Updated: 5 Feb 2019 8:38 PM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.2½ லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த புதுக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 49). இவர் சுசீந்திரம் அக்கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 2–ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு மது விற்பனையில் வசூலான ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு முருகன் வீட்டுக்கு புறப்பட்டார். அவருடன் கடை ஊழியர்கள் 2 பேரும் இருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட போது, கடையின் அருகில் உள்ள பூட்டப்பட்ட பாரில் இருந்து சத்தம் கேட்டது. உடனே முருகன் அங்கு சென்று பார்த்த போது, 4 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் முருகன் அதிர்ச்சி அடைந்தார். முருகன் சுதாரிப்பதற்குள் மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி விட்டு ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இந்த துணிகர கொள்ளை குறித்து முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடசேரியில் துப்பாக்கி வைத்திருந்ததாக அருள் சஜிவ் என்ற வாலிபர் கைதானார். அருள் சஜிவ்விடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் அருள் சஜிவ்விற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் துருவி, துருவி விசாரணை நடத்தியதில், அக்கரை டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முருகனை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் துப்பு துலங்கியது.

இந்த துணிகர கொள்ளையில் அவருக்கு தொடர்பு இருந்ததையும், கூட்டாளிகளுடன் சேர்ந்து கைவரிசை காட்டியதையும் ஒப்பு கொண்டார். மேலும் அவருடைய கூட்டாளிகள் சிரயான்குழி கண்ணல பாட்டுவிளையை சேர்ந்த நீலன் (27), நெல்லையை சேர்ந்த விஜயகுமார், டைசன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சுசீந்திரம் போலீசார் அருள் சஜிவ்வுடன் கொள்ளையில் ஈடுபட்ட மற்ற 3 பேரை தேடிவந்தனர். நேற்று முன்தினம் போலீசார் தெங்கம்புதூர் பகுதியில் வைத்து நீலனை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அருள் சஜிவை சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வடசேரி பஸ் நிலையத்தில் சந்தித்ததாகவும், அவர் தான் கொள்ளையடிக்க அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார். கொள்ளையடித்த பணத்தை 4 பேரும் பங்கு போட்டுள்ளனர்.

மற்றொரு டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட சமயத்தில் நீலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சற்று தாமதம் செய்திருந்தால் மற்றொரு துணிகர கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அந்த கொள்ளை சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொள்ளையில் ஈடுபட்ட மற்ற 2 பேரையும் சுசீந்திரம் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story