புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் பகுதியை இணைக்க கடும் எதிர்ப்பு
புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையை வரையரை செய்யும் வகையில் விழுப்புரத்தில் நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திருக்கோவிலூர் பகுதியை இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் பிரிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று கடந்த மாதம் 8-ந்தேதி தமிழக சட்டசபை கூட்ட தொடரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார்.
இந்த நிலையில் புதிதாக உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எந்தெந்த தாலுகா சேர்க்கப்படும் என்பது குறித்து பொதுமக்களிடையே பல்வேறு வகையான கருத்துகள் பரவியது. அதன்படி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகா பகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்கப்படும் என்றும் தகவல் பரவியது.
உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் தாலுகா பகுதிகளை சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்கள் பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதி விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடர்ந்திட வேண்டும் என்று கூறி பல கிராமங்களில் போராட்டங்களும் நடந்தது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியணி டம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
இதற்கிடையே புதிய மாவட்டத்தின் எல்லையை வரையறை செய்து, பிரிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க தமிழக அரசின் முதன்மை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்தியகோபாலை நியமித்து அரசு உத்தரவிட் டது. இதில் 5-ந்தேதி விழுப்புரத்திலும், 6-ந்தேதி கள்ளக்குறிச்சியிலும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. வருவாய் நிர்வாக ஆணையர் சக்தியகோபால் கலந்து கொண்டு, பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அப்போது அவர்கள் பேசுகையில், திருக்கோவிலூர் தாலுகாவில் இருந்து கண்டாச்சிபுரம் என்கிற புதிய தாலுகா பிரிக்கப்பட்டது. இதில் மக்களிடம் கருத்துகளை கேட்காமலேயே எல்லையை பிரித்ததால், மணம்பூண்டி, அரகண்டநல்லூர் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஏனெனில் 2 கி.மீ. தொலையில் உள்ள திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்திற்கு வருவதற்கு பதிலாக இவர்கள் 25 கி.மீ. தொலைவில் இருக்கும் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
எனவே மாவட்டம் என்கிற பெயரில் பிரித்து எங்களை மீண்டும் அலைக்கழிப்பு செய்ய வேண்டாம். திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், மணம்பூண்டி பகுதி மக்கள் விழுப்புரத்திற்கு வந்து செல்வது தான் எளிதாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து எங்கள் பகுதிகளை பிரிக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.
இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள அரசூர் உள்ளிட்ட 30 கிராம மக்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்கள் பகுதியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள். திருநாவலூர் ஒன்றியம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருந்தாலும், இதில் 20 ஊராட்சிகள் விழுப்புரத்திற்கு அருகே உள்ளது. எனவே இவர்களும் தங்களுக்கு கள்ளக்குறிச்சி நீண்ட தூரம், எனவே அருகில் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தோடு இருந்துகொள்வதாக தெரிவித்தனர்.
இதே போல் முகையூர் ஒன்றியத்தை சேர்ந்த கிராம மக்களும், அருகாமையில் உள்ள விழுப்புரத்தோடு இருந்து கொள்கிறோம் எங்களை விட்டுவிடுங்கள். திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர், முகையூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்க கூடாது என்று வலியுறுத்தி பேசினார்கள்.
அதேநேரத்தில் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை, திருப்பாலப்பந்தல் ஆகிய குறு வட்டங்களை கள்ளக்குறிச்சியோடு இணைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி பேசினர்.
விவசாயிகள் சங்கம் தரப்பில் கலந்து கொண்டவர்கள் பேசுகையில், தற்போது கள்ளக்குறிச்சியில் 2 சர்க்கரை ஆலைகளும், பெரியசெவலையில் ஒரு சர்க்கரை ஆலையும் உள்ளது. கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் பிரிந்தால் 3 சர்க்கரை ஆலைகளும் அந்த பகுதிக்கே சென்றுவிடும். விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட வராது. எனவே திருவெண்ணெய்நல்லூர் ஒட்டியுள்ள பெரிய செவலை உள்ளிட்ட ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்தோடு இணைத்து பெரியசெவலையில் இயங்கிவரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை விழுப்புரம் மாவட்டத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு சேர்க்க கூட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கைகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை வலியுறுத்தி வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபாலிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், கூவாகத்தை விழுப்புரத்திலிருந்து பிரிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
கூட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பேசுகையில், கல்வராயன்மலை, சின்னசேலம், சங்கராபுரம் பகுதி மக்களின் நன்மைக்காக புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டது. அதே சமயம் விழுப்புரத்தையொட்டி அமைந்துள்ள பகுதியை கள்ளக்குறிச்சியோடு இணைக்க வேண்டாம். இதில் சட்டமன்ற தொகுதி என்று பார்க்காமல், கிராமங்களின் தொலைவை கருத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக திருக்கோவிலூர் தொகுதியில் உள்ள திருப்பாலப்பந்தல், மணலூர்பேட்டை பகுதியை கள்ளக்குறிச்சியோடு சேருங்கள் என்று நானே கூறுகிறேன். ஏனென்றால் அவர்களுக்கு கள்ளக்குறிச்சிதான் அருகில் உள்ளது. அதே போல் திருவெண்ணெய்நல்லூர், அரசூர், சித்திலிங்கமடம் பகுதி விழுப்புரம் மாவட்டத்தோடு தான் இருக்க வேண்டும்.
அதே போல் உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர் ஒன்றியங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் விழுப்புரத்தோடுதான் இருக்க வேண்டும். அவசரகதியில் பிரித்து மக்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டாம் என்றார்.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பேசுகையில், திருவெண்ணெய்நல்லூர், முகையூர், திருநாவலூர், திருக்கோவிலூர் ஒன்றியங்களை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கக்கூடாது. மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று இந்த கிராமங்கள் விழுப்புரத்தோடு இருக்க வேண்டும். இந்த கிராமங்களை கள்ளக்குறிச்சியோடு இணைத்தால் தினசரி ஒரு போராட்டம் வெடிக்கும் என்று பேசினார்.
கூட்டத்தின் முடிவில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைப்பது குறித்து அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.
தொடர்ந்து நாளை(அதாவது இன்று) கள்ளக்குறிச்சி பகுதியினரிடம் கருத்து கேட்கப்பட இருக்கிறது. இதன் பின்னர் இதுபற்றிய அறிக்கையை தயார் செய்து, தமிழக அரசிடம் வழங்க இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருக்கோவிலூர் சப்-கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story