கும்பகோணம் பகுதியில் விலை வீழ்ச்சியால் வயலில் வீணாகும் வைக்கோல் விவசாயிகள் விரக்தி


கும்பகோணம் பகுதியில் விலை வீழ்ச்சியால் வயலில் வீணாகும் வைக்கோல் விவசாயிகள் விரக்தி
x
தினத்தந்தி 6 Feb 2019 4:15 AM IST (Updated: 6 Feb 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதியில் விலை வீழ்ச்சியால் வைக்கோல் வயலிலேயே வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா, தாளடி நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடையாகும் நெல்லை விவசாயிகள் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களிலும், தனியார் வியாபாரிகளிடமும் விற்பனை செய்து வருகிறார்கள்.

கும்பகோணம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை சேமித்து வைக்க தேவைப்படும் சாக்குகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை குறித்த காலத்தில் விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். குறைந்த எண்ணிக்கையிலேயே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப் பட்டிருப்பதும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிரமத்தை தவிர்க்க விவசாயிகள் பலர் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்று வருகிறார்கள். தனியார் வியாபாரிகள் வயல்களுக்கே நேரடியாக சென்று நெல்லை கொள்முதல் செய்வது விவசாயிகளுக்கு வசதியாக உள்ளது. இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் வைக்கோல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த குறுவை அறுவடையின்போது ஒரு கட்டு வைக்கோல் ரூ.160-க்கு விற்பனை ஆனது. தற்போது ஒரு கட்டு ரூ.40-க்கு விற்பனையாகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு வைக்கோல் மூலமாக கிடைக்கும் வருவாய் பயனுள்ளதாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது வைக்கோல் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது விவசாயிகளை விரக்தி அடைய செய்து உள்ளது. அறுவடை முடிந்த வயலில் இருந்து வைக்கோலை சேமித்து கட்டாக கட்டி வைக்க ஆகும் செலவுக்கு கூட விலை கிடைக்காததால், விவசாயிகள் பலர் வயல்களில் வைக்கோலை அப்படியே விட்டு விட்டனர். இதனால் வைக்கோல் வயலிலேயே வீணாகி வருகிறது.

இதுகுறித்து கும்பகோணம் அருகே உள்ள மருத்துவக்குடியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கடந்த குறுவை நெல் அறுவடையின்போது ஒரு ஏக்கரில் கிடைத்த வைக்கோல் ரூ.7,500-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.ஆயிரம் கூட கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வைக்கோலை விரும்பி சாப்பிடும் காளை மாடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், வைக்கோலின் தேவையும் குறைந்து விட்டது. காளை மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, விவசாய பணிகள் எந்திர மயமாகி விட்டது தான் காரணம்.

வைக்கோலை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தை விட அவற்றை கட்டு கட்டி பாதுகாக்கும் செலவு அதிகமாக இருப்பதால் வயலிலேயே வைக்கோலை விட்டு விடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story