கரூரில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி திறப்பு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை


கரூரில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி திறப்பு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Feb 2019 10:45 PM GMT (Updated: 5 Feb 2019 9:29 PM GMT)

கரூரில், மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட விபத்து தடுப்பு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் திறந்து வைத்தார். அதன் பின்னர் அந்த வழியாக சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போக்குவரத்து விதிகளை எடுத்துரைத்து நோட்டீசு வழங்கி போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

கரூர்,

கரூரில் 30-வது சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு மாவட்ட காவல்துறை சார்பில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை இந்த கண்காட்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட் டார். நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அந்த அறையில் சாலை விதிமீறலால் விபத்து எப்படி நிகழ்கிறது? அதில் ஏற்படும் உயிரிழப்பினால், இறந்தவரது குடும்பம் அடையும் துயரங்கள் என்ன? என்பன உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் பல இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்து புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

மேலும் சிக்னலில் நின்று செல்வது, ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனம் ஓட்டாதிருத்தல், நிர்ணயிக்கப்பட்ட எடையினை விட கூடுதலாக கனரக வாகனங்களில் ஏற்றக்கூடாது, பழுதான லாரி உள்ளிட்ட வாகனங்களை சாலையோரமாக நிறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டியவை குறித்தும் அந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதனை பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.

இதற்கிடையே மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே கோவை ரோட்டில் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் மற்றும் போலீசார் சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பான நோட்டீசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிரைவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினர். பின்னர் கோவை ரோட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, அந்த நோட்டீசை வழங்கி இனிமேல் இதுபோல் வந்தால் அபராதம் விதிக்கப்பட்டு சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்தனர். அப்போது ஒருவர் துணிமூட்டைகளை மோட்டார் சைக்கிளின் முன்னாலும், பின்னாலும் வைத்து கொண்டு கைப்பிடியை திருப்ப முடியாமல் வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்த போலீசார், விபத்து என்பது நொடிப்பொழுதில் நிகழும். எனவே மோட்டார் சைக்கிளில், ஆட்களை மட்டும் தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர். 

Next Story