காளையார்கோவில் அருகே அனல் மின் நிலையத்தில் குப்பை கழிவுகளை எரிப்பதால் சீர்கேடு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்


காளையார்கோவில் அருகே அனல் மின் நிலையத்தில் குப்பை கழிவுகளை எரிப்பதால் சீர்கேடு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 6 Feb 2019 4:45 AM IST (Updated: 6 Feb 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே அனல் மின் நிலையத்தில் குப்பை கழிவுகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே தனியார் அனல் மின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் மரங்களை வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் விலைக்கு வாங்கி எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நகராட்சி குப்பைகள் மற்றும் மருத்துவக்கழிவுகள் இங்கு கொண்டுவந்து எரிக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் பாலிதீன் குப்பைகள் அதிக அளவில் எரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு குப்பைகளை எரிப்பதனால் ஏற்படும் சீர்கேடான புகை, அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மேலும் குப்பைகளால் எரிப்பதால் கிளம்பும் கரும்புகை வீடுகளின் சுவர்களிலும், வீட்டுக்கு வெளியே காய வைக்கப்படும் துணிகளின் மீது படிந்து கருப்புநிறமாக காட்சியளிக்கிறது.

இந்த அனல் மின் நிலையத்தால் காளையார்கோவில், சீகூரணி, அய்யனார்குளம், அரியநாச்சி குடியிருப்பு, மோர்க்குழி உள்ளிட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் மின் நிலையத்தை சுற்றி 1 கி.மீ. சுற்றளவுக்குள் கல்லூரி, பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. குப்பைகளை எரிப்பதால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் மின் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் குப்பை கழிவுகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

எனவே இந்த வி‌ஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, இப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மின் நிலையத்தில் குப்பைகளை எரிக்க தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கலெக்டருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர்.


Next Story