கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் சாலையை அப்புறப்படுத்தி நிலத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவு


கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் சாலையை அப்புறப்படுத்தி நிலத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Feb 2019 11:00 PM GMT (Updated: 5 Feb 2019 10:41 PM GMT)

ராமநாதபுரத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் சாலையை அப்புறப்படுத்திவிட்டு உரியவரிடம் இடத்தை ஒப்படைக்க ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் விஜயன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான நிலம் மாடக்கொட்டான் பகுதியில் இருந்தது. கிழக்கு கடற்கரை சாலை அமைப்பதற்காக அரசு அவரது நிலத்தை கையகப்படுத்தியது. அவ்வாறு நிலம் கையகப்படுத்தியதற்காக 303 சதுர அடிக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால் இவரது நிலத்தில் மொத்தம் 1,483 சதுர அடி அளவுக்கு கையகப்படுத்தி சாலை போடப்பட்டிருந்தது.

இதையடுத்து எஞ்சியுள்ள 1,180 சதுரடிக்கு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி ராமநாதபுரம் உரிமையியல் கோர்ட்டில் கடந்த 2012–ம் ஆண்டு விஜயன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை முன்சீப் கோர்ட்டு நீதிபதி விசாரித்து தார்ச்சாலையை அப்புறப்படுத்திவிட்டு விஜயனிடம் நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அதன் பின்பும் நிலம் ஒப்படைக்கப்படாததால் கடந்த 2015–ம் ஆண்டு அதே கோர்ட்டில் விஜயன் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது நிலத்தை உடனடியாக ஜப்தி செய்து ஒப்படைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2018–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4–ந்தேதி நிலத்தை ஜப்தி செய்வதற்காக அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். அப்போது அங்கு வந்த அப்போதைய ராமநாதபுரம் தாசில்தார் சாந்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் மற்றும் அதிகாரிகள், கோர்ட்டு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 2018–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ந்தேதியிட்ட அரசாணை நகலை கோர்ட்டு ஊழியர்களிடம் காட்டினர்.

அதில் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட விஜயனின் நிலத்திற்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரத்து 629 இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நிறைவேற்ற 10 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

அதன் பிறகும் தற்போது வரை இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் விஜயன் மீண்டும் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரணை செய்த முன்சீப் கோர்ட்டு நீதிபதி ராஜேஷ்குமார், உடனடியாக தார்ச்சாலையை எந்திரம் மூலம் அப்புறப்படுத்திவிட்டு நிலத்தை விஜயனிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இதன்படி மனுதாரர் விஜயன், அவரது வக்கீல் சுந்தர்ராஜன் ஆகியோருடன் கோர்ட்டு அலுவலர்கள் நிலத்தை ஜப்தி செய்ய நேற்று நடவடிக்கை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் தாசில்தார் கார்த்தி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று கடந்த மாதம் 30–ந்தேதியிட்ட அரசு நெடுஞ்சாலைத்துறையின் உத்தரவில் விஜயனுக்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை அவரிடம் ஒப்படைக்க ஒருவார காலம் அவகாசம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சாலையை ஜப்தி செய்யும் நடவடிக்கையை கோர்ட்டு அலுவலர்கள் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.


Next Story