காட்டாம்பூண்டி அரசு பள்ளியில் ஆசிரியர் பணியிடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா
காட்டாம்பூண்டி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணாபுரம்,
காட்டாம்பூண்டி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணாபுரம் அருகே காட்டாம்பூண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 800–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உடற்கல்வி ஆசிரியராக சிவப்பிரகாசம் என்பவர் கடந்த 2007–ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரியகுளம் பகுதிக்கு மாற்றப்பட்டார்.
இதனை கண்டித்தும் சிவப்பிரகாசத்தை இதே பள்ளியில் மீண்டும் உடற்கல்வி ஆசிரியராக பணியமர்த்தக்கோரியும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் நேற்று காலை 9.30 மணியளவில் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தச்சம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறினர். இதில் மாணவ, மாணவிகள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் அதனை கைவிட்டு கலைந்து வகுப்பிற்கு சென்றனர்.