நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் முத்தரசன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2019 3:30 AM IST (Updated: 6 Feb 2019 7:06 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்–புதுவையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று முத்தரசன் கூறினார்.

நெல்லை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்–புதுவையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று முத்தரசன் கூறினார்.

பேட்டி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

மத்தியில் ஆட்சி செய்யும் மோடியின் அரசு தொடர்ந்து 4 ஆண்டுகளாக மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது. மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக மக்களை வாட்டிவதைக்கும் மோடியின் அரசு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் மக்களை ஏமாற்றக்கூடிய திட்டங்களை அறிவித்து உள்ளார். மோடி உலகிலேயே மிகச்சிறந்த நடிகர், அவருடைய நடிப்பின் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார். வருகிற தேர்தலில் அவரை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

தமிழகத்திற்கு துரோகம் செய்த பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரை கூறி உள்ளார். ஆனால் அ.தி.மு.க.வும், பாரதீய ஜனதா கட்சியும் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தற்போது வெளிப்படையாக கூறமுடியாமல் திணறி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் அவர்களுடைய ரகசியம் வெளிப்படும். பாரதீய ஜனதாவையும், அ.தி.மு.க.வையும் நம்ப மக்கள் தயாராக இல்லை. தற்போது நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இது 5 மாநில சட்டசபை தேர்தலில் எதிரொலித்தது. மோடி நவீன தெனாலிராமனாக இருந்து மக்களை ஏமாளியாக்கிவிடலாம் என்று நினைக்கிறார். மக்கள் ஏமாறமாட்டார்கள்.

தி.மு.க. கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியும் சேர்த்து உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் பாரதீய ஜனதா, அ.தி.மு.க. அளிக்கும் தேர்தல் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்கள் பிரசாரம் இருக்கும்.

‘இந்தியாவை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற தலைப்பில் கோவையில் வருகிற 26–ந் தேதி மாநாடு நடத்துகிறோம். இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக அமையும். நாங்கள் மம்தாவுடனும், பாரதீய ஜனதாவுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்.

விவசாயிகள் கடன்

தமிழகம் முழுவதும் பாசன குளங்கள், ஏரிகளை தூர்வார வேண்டும். வருகிற தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் மீது அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தபட்ட 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஒரு வருடமாக ஜாமீன் கிடைக்காமல் இருப்பதன் பின்னணி என்ன என்பதை விளக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story