சிக்னல் பழுது காரணமாக தஞ்சை ரெயில்கள் தாமதம் பயணிகள் அவதி


சிக்னல் பழுது காரணமாக தஞ்சை ரெயில்கள் தாமதம் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 7 Feb 2019 4:15 AM IST (Updated: 6 Feb 2019 9:21 PM IST)
t-max-icont-min-icon

சிக்னல் பழுது காரணமாக தஞ்சைக்கு ரெயில்கள் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

தஞ்சாவூர்,


தஞ்சை– திருச்சி ரெயில்வே வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ரெயில்வே வழித்தடத்தில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சை ரெயில்கள் அடிக்கடி தாமதமாக வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது சிக்னல் பழுது ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு காலை 10.10 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் தஞ்சையை அடுத்த ஆலக்குடிக்கு காலை 11.29 மணிக்கு வந்தது.


ஆனால் ரெயில்வே லைனில் பழுது காரணமாக சிக்னல் கிடைக்காததால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மதியம் 1.05 மணிக்கு இந்த ரெயில் தஞ்சைக்கு வந்தது. வழக்கமாக 11.20 மணிக்கு வர வேண்டிய ரெயில் 1¾ மணி நேரம் தாமதமாக வந்தது.

இதே போல் கோவையில் இருந்து மயிலாடுதுறை வந்த ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி– ஆலக்குடி இடையே நிறுத்தப்பட்டு 1¾ மணி நேரம் தாமதமாக தஞ்சைக்கு வந்தது. சிக்னல் பழுது காரணமாக இந்த ரெயில் தாமதமாக வந்ததால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்த ரெயிலுக்காக பயணிகள் ரெயில் நிலையத்தில் வெகுநேரமாக காத்திருந்தனர்.

Next Story