அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Feb 2019 4:15 AM IST (Updated: 7 Feb 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குடவாசல்,

குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட சேங்காலிபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 80 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிக்கு இணையாக தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இங்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையில் ஒன்றிய அளவில் இப்பள்ளி முதலிடம் பெற்று வருகிறது. இந்த பள்ளிக்கு சேங்காலிபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் இணைந்து மாணவர்களின் கல்விக்கு தேவையான எழுது பொருட்கள், நாற்காலிகள், குடிநீர் வைக்க பாத்திரம் உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீர்வரிசையாக வழங்கினர். இந்த பொருட்களை விநாயகர் கோவிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

பின்னர் அந்த பொருட்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திராவிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் கலா மற்றும் பெற்றோர் சங்க தலைவர் கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story