பிரதமருக்கு ரூ.17 மணியார்டர் அனுப்பிய விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


பிரதமருக்கு ரூ.17 மணியார்டர் அனுப்பிய விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 7 Feb 2019 4:30 AM IST (Updated: 7 Feb 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இருந்து விவசாயிகள், பிரதமருக்கு ரூ.17 மணியார்டர் அனுப்பினர். அப்போது அவர்கள் கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது நாள் ஒன்றுக்கு ரூ.17 எனக்கூறி விவசாயிகள் பிரதமருக்கு ரூ.17 மணியார்டர் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில், தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை தலைமை தபால் நிலையத்துக்கு வந்து பிரதமருக்கு ரூ.17 மணியார்டர் அனுப்பினர். பின்னர் அவர்கள் தலைமை தபால் நிலைய வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் சுகுமாறன் நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகையாக சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.17 வீதம் வழங்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை.

நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.17 என்பது 1 நாளைக்கு டீ ரூ.10 மற்றும் வடை ரூ.7 ஆகும் செலவு ஆகும். எனவே பிரதமருக்கு ஊதியமாக விவசாயிகள் ரூ.17 வழங்கும் வகையில் மணியார்டர் அனுப்பி உள்ளோம். எனவே உடனே அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வருகிற 8-ந்தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தமிழக அரசு இதை அறிவிக்க வேண்டும்”என்றார்.

Next Story