பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம், கவர்னரை செயல்பட விடாமல் மத்திய அரசு முட்டுக்கட்டை


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம், கவர்னரை செயல்பட விடாமல் மத்திய அரசு முட்டுக்கட்டை
x
தினத்தந்தி 6 Feb 2019 10:30 PM GMT (Updated: 6 Feb 2019 7:43 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் கவர்னரை செயல்படவிடாமல் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்று அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் குற்றம்சாட்டினார்.

தேனி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 28 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு, கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பரிந்துரை செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில், 7 பேர் விடுதலைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

அதன்படி தேனியில் நேற்று மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் அற்புதம்மாள் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இது எடப்பாடி பழனிசாமியின் சாதனையாக கூட இருக்கட்டும்.

இதேபோன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. கவர்னரிடம் அழுத்தம் கொடுத்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், கவர்னரை செயல்படவிடாமல் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது.

கோர்ட்டு, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றை தன்னிச்சையாக செயல்படவிடாமல் மத்திய அரசு கையில் வைத்துள்ளது. இது முறையற்ற செயல். 7 பேரையும் விடுவிக்க கவர்னர் கையெழுத்திட வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்வாரா? என்று தெரியவில்லை. 7 பேரின் விடுதலைக்காகவும் அ.ம.மு.க. தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அற்புதம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

7 பேரை விடுதலை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டவுடன் நான் கவர்னரை சந்தித்து கோரிக்கை வைத்தேன். எப்படியும் ஒரு வாரத்துக்குள் கவர்னர் கையெழுத்து போட்டு விடுவார் என்று நம்பினேன். ஆனால், 5 மாதங்கள் ஆகியும் கவர்னர் முடிவு எடுக்கவில்லை. 7 பேர் விடுதலை என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக எதிரொலிக்கிறது.

ஏற்கனவே 3 முறை விடுதலை என்று அறிவித்தபோது, காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் எதிர்ப்பால் அது சாத்தியமின்றி போனது. இந்த முறை நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். எனது மகன் விடுதலையாகி வந்தவுடன் அவனுக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும். 19 வயதில் சிறைக்கு சென்றவன். இப்போது அவனுக்கு 47 வயது ஆகிறது.

கவர்னர் ஏன் தாமதிக்கிறார் என்று தெரியவில்லை. எந்த அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது என்றும் புரியவில்லை. கவர்னர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லும் எண்ணம் இல்லை. அதனால், மக்கள் மன்றத்தை நாடிச் சென்று கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. மாநில மருத்துவ அணி தலைவர் கதிர்காமு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், நாம் தமிழர் கட்சி தேனி மண்டல செயலாளர் அன்பழகன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story