12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் சங்க பொதுச் செயலாளர் பேட்டி


12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் சங்க பொதுச் செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2019 4:15 AM IST (Updated: 7 Feb 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் முகமது அலி தெரிவித்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமதுஅலி கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பசும்பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.28-ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.35-ல் இருந்து ரூ.48 ஆகவும் அரசு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்திட வேண்டும். கால்நடை தீவனங்களை 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் சேர்த்து வழங்கிட வேண்டும். பால் பவுடர் மற்றும் பால் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும்.

பால் நிலுவை தொகையான ரூ.200 கோடி முழுவதையும் ஆவின் நிர்வாகம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பால் வளத்துறை அமைச்சரிடம் பேசினோம். அவர் இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காண்பதாக கூறியுள்ளார். ஆனாலும் வருகிற 12-ந் தேதி பால் உற்பத்தியாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் நிர்வாகங்கள், அரசு அலுவலகங்கள் முன்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அந்த ஆர்ப்பாட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் பால் பவுடர் மற்றும் பாலில் இருந்து மதிப்பு கூட்டுப்பொருட்களை தயாரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சங்கத்தின் மாநில தலைவர் முனுசாமி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 

Next Story