மோட்டார் சைக்கிளுடன் கிணற்றுக்குள் பாய்ந்த மாட்டு வியாபாரி


மோட்டார் சைக்கிளுடன் கிணற்றுக்குள் பாய்ந்த மாட்டு வியாபாரி
x
தினத்தந்தி 6 Feb 2019 10:30 PM GMT (Updated: 6 Feb 2019 8:33 PM GMT)

மோட்டார் சைக்கிளுடன் கிணற்றுக்குள் பாய்ந்த மாட்டு வியாபாரி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா காட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 50). மாட்டு வியாபாரி. நேற்று இவர், தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த தேவராஜ் மோட்டார் சைக்கிளுடன் கிணற்றுக்குள் விழுந்தார். இதில் முகம், கை, கால்களில் பலத்த அடிபட்டதால் வலி தாங்க முடியாமல் அலறினார். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயிகள், இது குறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் படுகாயத்துடன் வலியால் துடித்து கொண்டிருந்த தேவராஜை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கிணறு சற்று பெரியதாக இருந்ததால் கயிற்று கட்டிலின் 4 முனைகளிலும் கயிறு கட்டி உள்ளே இறக்கி, அதன் மீது தேவராஜை பத்திரமாக படுக்க வைத்து 1 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் தேவராஜ், கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story