கூடுதலாக ஆட்களை ஏற்றிய ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை


கூடுதலாக ஆட்களை ஏற்றிய ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2019 10:45 PM GMT (Updated: 6 Feb 2019 8:44 PM GMT)

கூடுதலாக ஆட்களை ஏற்றி சென்ற ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்,

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி கரூர் சுங்ககேட் பகுதியில் நேற்று, கரூர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரி சுப்பிரமணியன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், ரவிசந்திரன், மீனாட்சி, தனசேகர், ஆனந்த் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி, நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட அதிகளவு பாரங்கள் ஏற்றப்பட்டுள்ளனவா? மேலும் விதிகளை மீறி ஆட்கள் மற்றும் ஆடு-மாடு உள்ளிட்ட விலங்கினங்களை ஏற்றி செல்கின்றனரா? என ஆய்வு மேற்கொண்டு ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது சாலை வரி செலுத்தாத ஒரு காரினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அந்த வழியாக ஆட்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோக்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கூடுதலாக ஆட்களை ஏற்றி வந்த 3 ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கியதுடன், அபாரதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் வாகன விதிகளை மீறுவோருக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், வாகனங்களை பறிமுதல் செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

குளித்தலையில் நேற்று முன்தினம், விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் குறித்து தணிக்கை செய்யப்பட்டது. இதில் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்த 11 பேர் உள்பட பல்வேறு பிரிவுகளில் 21 பேர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.22 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியது உள்பட விதிமீறி வாகனம் ஓட்டி வந்த 10 பேருக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.இதே போல், கரூர் சுக்காலியூர் ரவுண்டானா அருகே வட்டார போக்குவரத்து துறையினர் சோதனை மேற்கொண்டதில், அந்த வழியாக அளவுக்கு அதிகமாக ஜல்லிகற்கள், மணல் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 

Next Story