திருவண்ணாமலையில் சோழர் கால கோவில் கட்டுமானம் பூமிக்கடியில் கண்டெடுப்பு


திருவண்ணாமலையில் சோழர் கால கோவில் கட்டுமானம் பூமிக்கடியில் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 7 Feb 2019 10:15 PM GMT (Updated: 7 Feb 2019 6:48 PM GMT)

திருவண்ணாமலையில் சோழர் கால கோவில் கட்டுமானம் பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை செங்கம் சாலையில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் ராஜலிங்கேஸ்வர நந்த விநாயகர் மண்டக படி மடாலயம் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி நள்ளிரவு நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி ஆகியவை இணைந்து இந்த கோவிலின் கருவறை மேல் உள்ள கட்டுமானத்தை இடித்து தரைமட்டமாக்கியது.

இந்த நிலையில் கருவறை இடிக்கப்பட்ட இடத்தில் கடந்த 2-ந் தேதி திருவண்ணாமலை நகராட்சி சார்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். அப்போது அந்த இடத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால கோவில் அடிக்கட்டுமானம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆதிதிராவிட சொத்து மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பரையரசன், பேராசிரியர் சுந்தரேசன், திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த தலைவர் த.ம.பிரகாஷ், இணைச் செயலாளர் பேராசிரியர் சு.பிரேம்குமார், ஓவியர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் பிரேம்குமார் கூறியதாவது:-

இக்கட்டுமானம் 15 வரிகள் கொண்ட பழைய வடிவ செங்கல் கட்டுமானம் ஆகும். இது 8-க்கு 8 நீளம், அகலத்தில் அமைந்துள்ளது. இச்செங்கல் கட்டுமானத்தில் அடியில் பெரிய கருங்கற்கள் 4 புறமும் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. அதனுடன் கருமணலை கொண்டு நிரப்பப்பட்டு உள்ளன. இந்த கருமணலை 5 அடிக்கு கீழே வருடினாலோ, அள்ளி எடுத்தாலோ நீரூற்று வந்து கொண்டே இருக்கிறது.

இக்கட்டுமான அமைப்பை முற்கால சோழர் காலம் தொடங்கி பல்லவர், பிற்கால பாண்டியர்கள், ஹோய்சாலர்கள், விஜயநகர நாய்க்கர் காலம் வரை பின்பற்றி வந்து உள்ளனர். தமிழர்களால் கட்டப்பட்ட இக்கட்டுமானத்தின் சிறப்பு என்னவென்றால், கருமணல் கொண்டு 15 அடி ஆழத்திற்கு கொட்டப்பட்டு இருக்கும் பழந்தமிழர்களின் கோவில் உள்ளிட்ட மாட மாளிகைகளின் கட்டுமான அமைப்பில் இந்த முறையே கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பின்பற்றப்படுகிறது.

இக்கருமணல் அமைப்பானது பூகம்பம் உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்து மேலே உள்ள கட்டுமானத்தை பாதுகாக்கும் வல்லமை பெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story