குக்கர் சின்னம் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் - தியாகதுருகத்தில் டி.டி.வி.தினகரன் பேட்டி
குக்கர் சின்னம் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று தியாகதுருகத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை. குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். தேர்தல் சின்னத்தை வைத்து மட்டும் மக்கள் வாக்களிக்கவில்லை. மக்களுக்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு தான் வாக்களிக்கிறார்கள்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது 29 அமைச்சர்களும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் என எல்லோருமே தேர்தல் பணி செய்தனர். ஆனால், மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லை. குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர்.
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக மக்கள் சேவை செய்பவர்களுக்கே வாக்களிப்பார்கள். குக்கர் சின்னம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளோம். அந்த சின்னம் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து எங்களுடன் சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பேசி வருகிறார்கள். இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், 11 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்புகிறோம். அப்படி தீர்ப்பு வந்தால் தமிழக சட்டசபை தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறும். இதனால் அரசுக்கு செலவு மிச்சம்.
நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரோ அல்லது ஜெயலலிதாவோ அல்ல. நடிகர்கள் விஜயோ, அஜித்தோ அல்ல. இருப்பினும் நான் செல்லும் பகுதிகளில் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எனவே வருகிற தேர்தலில் எங்களுக்கு எந்த சின்னம் ஒதுக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான பிரபு, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கோமுகி மணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டார். அதன்படி நேற்று மாலை ரிஷிவந்தியத்துக்கு வந்த அவர் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் மக்கள் நலனை பற்றி கவலைப்படுவதில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் இந்த ஆட்சி முடிவுக்கு வந்து விடும். மேலும் மிகவும் பின்தங்கிய பகுதியான ரிஷிவந்தியம் தொகுதியை தனி தாலுகாவாக அறிவிக்கவேண்டும். புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்க வேண்டும்.
மகளிர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவேண்டும். ரிஷிவந்தியம் ஒன்றியத்தை 2-ஆக பிரிக்கவேண்டும், மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும், தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்பன போன்ற ரிஷிவந்தியம் பகுதி மக்களின் கோரிக்கைகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து பாசார், லாலாபேட்டை, மணலூர்பேட்டை. காங்கியனூர் ஆகிய பகுதியில் டி.டி.வி.தினகரன் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டார்.
அப்போது தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, செந்தில்குமரன், தங்கதுரை, நகர செயலாளர் நம்பி, அமுதமொழி, காங்கியனூர் பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story