முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அமைச்சர் வழங்கினார்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Feb 2019 11:00 PM GMT (Updated: 7 Feb 2019 7:06 PM GMT)

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை நடத்திட தமிழக அரசால் ஆண்டுதோறும் ரூ.8 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 21 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் தடகளம், கூடைப்பந்து, கபடி, நீச்சல், மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், கைப்பந்து மற்றும் பூப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.750-ம், 3-ம் பரிசாக ரூ.500-ம் ஆக மொத்தம் 567 பேருக்கு ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 250 வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாநில அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் 830 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையாக ரூ.4 கோடியே 59 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே நீங்கள் அனைவரும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று நமது மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவா, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் வடிவேல் முருகன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தங்ககதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story