மேச்சேரி அருகே தொழில் தொடங்க கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சம் மோசடி மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி சிக்கினார்


மேச்சேரி அருகே தொழில் தொடங்க கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சம் மோசடி மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி சிக்கினார்
x
தினத்தந்தி 8 Feb 2019 3:15 AM IST (Updated: 8 Feb 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே தொழில் தொடங்க சிறுதொழில் வணிக கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேச்சேரி, 

சேலம் மாவட்டம் கொளத்தூர் அய்யம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி சக்திவதி (வயது 29). இவர் கொளத்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவியாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சிறு தொழில் வணிக கடனாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் பெற்று தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பணம் வசூலித்துள்ளார்.

அதாவது மேச்சேரி அருகே உள்ள விருதாசம்பட்டி குன்றிவளவு பகுதியை சேர்ந்த சசிக்குமார் மனைவி பாக்கியலட்சுமி (27), கண்ணையன் மனைவி விஜயா (53), கருப்புரெட்டியூரை சேர்ந்த புவனேஸ்வரி (45) ஆகிய 3 பேரை ஏஜெண்டாக நியமித்து, சக்திவதி சுமார் 378 பேரிடம் தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரத்து 500 வரை, சுமார் ரூ.61 லட்சம் வசூல் செய்துள்ளார்.

பணம் கொடுத்தவர்களுக்கு தொழில் தொடங்க ரூ. 2 லட்சத்து 70 ஆயிரத்தை பெற்று வழங்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் திருப்பிக்கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி, விஜயா, புவனேஸ்வரி ஆகியோர் ஒரு அட்டைபெட்டியை பணம் அளித்தவர்களுக்கு கொடுத்தனர். அதில் பணம் உள்ளது என்றும், வங்கி மேலாளர் வந்த பின்னர் அவர் முன்பாக திறந்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் 2 நாட்கள் கடந்தும் வங்கி மேலாளர் என்று யாரும் வரவில்லை. இதைத்தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் அட்டை பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் ஒவ்வொரு கட்டிலும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டும், அதற்கு கீழ் வெள்ளைத்தாள்களும் இருந்தன. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், சக்திவதியை பிடிக்க முடிவு செய்தனர்.

இதன்படி சக்திவதியை தொடர்பு கொண்ட பாதிக்கப்பட்டவர்கள், மேலும் 50 பேரிடம் பணம் வசூலித்து வைத்துள்ளோம், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சக்திவதி மற்றும் 2 பேர் ஒரு காரில் விருதாசம்பட்டி குன்றிவளவுக்கு வந்தனர். உடனே அங்கு தயாராக இருந்த ஏஜெண்டுகள் 3 பேர் மற்றும் பணம் கொடுத்தவர்கள் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ஒரு வீட்டில் வைத்து விட்டு, நங்கவள்ளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் நங்கவள்ளி போலீசார் விரைந்து வந்து, சக்திவதியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத்தருமாறு கூறி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வீட்டின் முன்பு ஊர் மக்களும், பணம் கொடுத்த அனைவரும் கூடியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் சக்திவதி மற்றும் அவருடன் வந்த 2 பேரை பிடித்துக்கொண்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், தொழில் தொடங்க கடன் வாங்கி தருவதாக கூறி, ரூ.61 லட்சம் வரை மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளோம் என்று கூறினார்கள்.

Next Story