மணப்பாறையில் கியாஸ் ஏஜென்சியில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை


மணப்பாறையில் கியாஸ் ஏஜென்சியில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 8 Feb 2019 4:15 AM IST (Updated: 8 Feb 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறையில் கியாஸ் ஏஜென்சியில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையில் யாகப்பன் என்பவர் கியாஸ் ஏஜென்சி அலுவலகம் நடத்தி வருகிறார். இதில் பலர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்குச் சென்றனர். நேற்று காலை மீண்டும் அலுவலகத்தை திறக்க வந்தபோது, முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் உள்ளே கதவுகள் திறந்திருந்ததுடன் பொருட்கள் சிதறி கிடந்தன. இது பற்றி ஊழியர்கள், யாகப்பனுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் அங்கு வந்து பார்த்தபோது பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சில கம்ப்யூட்டர் பொருட்களை மர்ம நபர்கள் உடைத்துவிட்டு, கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து விட்டு சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் போலீஸ் மோப்ப நாய் மற்றும் விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் திருப்பி வைத்திருந்ததால், அதில் திருட்டு சம்பவம் தொடர்பான காட்சி பதிவாகவில்லை.

இதையடுத்து அக்கம், பக்கத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் திருட்டு சம்பவம் பற்றிய காட்சி பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story