துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர அதிகாரிகள் உதவ வேண்டும் ஆணைய உறுப்பினர் பேச்சு


துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர அதிகாரிகள் உதவ வேண்டும் ஆணைய உறுப்பினர் பேச்சு
x
தினத்தந்தி 7 Feb 2019 11:00 PM GMT (Updated: 7 Feb 2019 8:42 PM GMT)

துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர அதிகாரிகள் உதவ வேண்டும் என்று தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மானி கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு என குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் குறித்து தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி நேற்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலையில் துப்புரவு பணியாளர்களுக்கென்று செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதில் பேரூராட்சி, நகராட்சி, போலீஸ் நிலையங்கள், ஊரகப்பகுதிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தோரணகல்பட்டியில், பிரதமமந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் 640 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு பகுதி என்பது 32 வீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். மொத்தம் 20 பகுதிகள் ரூ.55½ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டிற்குள் அனைத்து கட்டுமானப்பணிகளும் முடிவடைந்து துப்புரவு பணியாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்படும். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள் முறையாக கல்வி பயில, அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றதா என்றும், துப்புரவு தொழிலாளர்கள் நலமுடன் இருக்க அவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுகின்றதா என்றும் துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை என்றால் அவர்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்களின் வாரிசுகளும் துப்புரவு பணியாளர்களாக இல்லாமல் நன்கு படித்து நல்ல அரசுப்பதவிகளில் உயர் அலுவலர்களாக சிறந்து விளங்க வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுக்கென்று கட்டப்பட்டு வரும் வீடுகள் போலவே, பேரூராட்சிகளிலும் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை பாராட்டி மாவட்ட கலெக்டருக்கும், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தோரணகல்பட்டி பகுதியில் சிறப்பான முறையில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதை பாராட்டி கரூர் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கும் தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி, நகராட்சி ஆணையர்கள் ராஜேந்திரன்(கரூர்- பொறுப்பு), சையத் முஸ்தபா கமால் (குளித்தலை) உள்ளிட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story