கொப்பம்பட்டியில் விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்


கொப்பம்பட்டியில் விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 8 Feb 2019 4:30 AM IST (Updated: 8 Feb 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

கொப்பம்பட்டியில் விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகேயுள்ள வைரிச்செட்டிப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் நேற்று கொப்பம்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட விவசாய தொழிலாளர்கள் வைரிச்செட்டிப்பாளையத்தில் இருந்து ஊர்வலமாக, கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியபடி கொப்பம்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து கொண்டு செல்ல அரசு பஸ் ஒன்றை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

விவசாய தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கொப்பம்பட்டியில் இருந்து வைரிச்செட்டிப்பாளையம், கோட்டப்பாளையம், பி.மேட்டூர் பகுதிகளுக்கு வாகனங்கள் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, 100 நாள் வேலையை அனைத்து பயனாளிகளுக்கும் தொடர்ந்து வழங்க வேண்டும். நிலுவை கூலித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வைரிச்செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். தெருவிளக்கு, சாக்கடை அள்ளுதல் போன்ற அடிப்படை வசதிகளை அனைத்து வீதிகளுக்கு செய்து கொடுக்க வேண்டும். உள்ளாட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்திய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையடுத்து கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலவலர் (கிராம ஊராட்சிகள்) மனோகரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், ஒன்றிய மேற்பார்வையாளர் பரமேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ராதா, கிராம நிர்வாக அலுவலர் ரெங்கராஜன், வைரிச்செட்டிப்பாளையம் ஊராட்சி மன்ற ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் தொழிலாளர் சங்க முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், குடிநீர் பற்றாக்குறையை போக்க லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். இதை ஏற்று விவசாய தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் துறையூர்- பி.மேட்டூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story