வேனில் கடத்தி செல்லப்பட்ட 3,168 போலி மதுபாட்டில்கள் சிக்கியது
பல்லடம் அருகே வாகன சோதனையின் போது வேனில் கடத்தி செல்லப்பட்ட 3,168 போலி மதுபாட்டில்கள் சிக்கியது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அவினாசி,
பல்லடம்-பாலசமுத்திரம் வழியாக ஒரு வேனில் போலி மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் பல்லடம்-பாலசமுத்திரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளும், அதை தொடர்ந்து ஒரு வேனும் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார், அந்த மோட்டார் சைக்கிளையும், வேனையும் நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர், அங்கேயே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். அதுபோல் வேன் டிரைவரும் வேனை நடுரோட்டில் நிறுத்தி விட்டு வேனை விட்டு இறங்கி ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீசார் அந்த வேனை சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வேனில் மது நிரப்பப்பட்ட 3,168 பாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும் போலி என தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3½ லட்சமாகும். இதையடுத்து 3,168 போலி மதுபாட்டில்களுடன் அந்த வேனையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து அவினாசி மதுவிலக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து அந்த போலி மதுபாட்டில்கள் எங்கு இருந்து கடத்தி வரப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? போலி மதுபான ஆலை உள்ளதா? கடத்தி வந்தது யார்? வேன் மற்றும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்கள் யார்? என்று அதன் பதிவு எண்களை கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். வாகன சோதனையின் போது போலி மதுபாட்டில்கள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story